உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  யுடியூபர் சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கில் பிடிவாரண்டில் கஞ்சா வியாபாரி கைது

 யுடியூபர் சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கில் பிடிவாரண்டில் கஞ்சா வியாபாரி கைது

தேனி: தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக யுடியூபர் சவுக்கு சங்கர் மீதான வழக்கில் ஜாமினில் வெளியே வந்து விசாரணைக்கு ஆஜராகாமல் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மகேந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பெண் போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதுாறாக பேசியதாக யுடியூபர் சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் அவரை 2024 மே 4 தேனி பழனிசெட்டிபட்டியில் தேனி போலீசார் உதவியுடன் கோவை போலீசார் கைது செய்தனர். அப்போது சவுக்கு சங்கர் தங்கிய விடுதி அறை, பயணித்த காரை போலீசார் சோதனையிட்ட போது 409 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் சவுக்கு சங்கர், உதவியாளர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ராம்பிரபு, கார் டிரைவர் சென்னை நுங்கம்பாக்கம் ராஜரத்தினம் ஆகியோரை கைது செய்தனர். கஞ்சா வியாபாரிகள் இவர்களுக்கு கஞ்சா விற்றதாக பரமக்குடி மகேந்திரனை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் கிடாத்திருக்கை பாலமுருகன் அவருக்கு கஞ்சா விற்பனை செய்ய வழங்கியது தெரிந்தது. மகேந்திரன், பாலமுருகன், சவுக்குசங்கரை போலீஸ் காவலில் எடுத்து பழனிசெட்டிபட்டி ஸ்டேஷனில் விசாரித்தனர். சவுக்குசங்கர் இந்த வழக்கில் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை மதுரை போதைப்பொருட்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த ஜூலையில் ஆன்லைன் மூலம் மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஜாமினில் சென்ற மகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மகேந்திரனை கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. தேனி எஸ்.பி., சினேஹா பிரியா உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ., இளங்குமரன் மற்றும் தனிப்படை போலீசார் கமுதியில் தங்கியிருந்த மகேந்திரனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ