| ADDED : டிச 07, 2025 06:00 AM
கம்பம்: ஆடுகளுக்கு ஆண்டிற்கு 4 முறை குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கலாம் என கம்பம் கால்நடை டாக்டர் செல்வம் ஆலோசனை வழங்கி உள்ளார். அவர் கூறியதாவது : தேனி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆடுகள் வளர்ப்பும் அதிகம். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆடுகள், மாடுகளுக்கு குடற்புழுக்கள் உருவாகும். நாடாப்புழு, நூற்புழு, குட்டைப் புழு, தட்டைப்புழு என பல வகைப் புழுக்கள் குடலில் உருவாகும். மேய்ச்சலுக்கு ஆடுகள் செல்லும் போது, ஆடுகள் உண்ணும் புல் மற்றும் செடி கொடிகளில் உள்ள சிறிய பூச்சிகள் வயிற்றுக்குள் சென்று புழுக்கள் உருவாகிறது. மாடுகளுக்கு பாதிப்பு இருக்காது. காரணம் மாடுகளுக்கு புல் அறுத்து சிறிது நேரம் கழித்து தான் தீவணமாக கொடுப்பார்கள். எனவே ஆடுகளுக்கு மட்டுமே பாதிப்பு அதிகமாக இருக்கும். எனவே ஆண்டிற்கு 4 முறை ஆடுகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இருந்த போதும் ஆடுகளுக்கு பெரும்பாலோர் ஒரே வகை மருந்தை தொடர்ந்து கொடுப்பதால் பயனற்று போகிறது. சினையாக உள்ள ஆட்டிற்கென பிரத்யேக மருந்துகள் உள்ளன . ஆரோக்கியமான ஆடுகளுக்கு மட்டுமே குடற்புழு நீக்க மாத்திரைகள் கொடுக்க வேண்டும். ஆட்டின் எடை அதன் ஆரோக்கியத்தை பார்த்து சரியான அளவு கொடுக்க வேண்டும். அதிகமாகவும் கொடுக்க கூடாது. குறைவாகவும் கொடுக்க கூடாது. ரத்தத்திலும் ஒரு சில பூச்சிகள் இருக்கும். அதற்கும் மருந்து கொடுக்க வேண்டும். குடற்புழு நீக்க மாத்திரைகள் கால்நடை மருந்தகங்களில் போதிய அளவு இருப்பு உள்ளது. ஆடு வளர்ப்போர் கால்நடை மருந்தகத்தை அணுகி குடற்புழு மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.