| ADDED : டிச 07, 2025 08:46 AM
ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் விளைச்சல் அதிகரித்து தேவை குறைந்ததால் எலுமிச்சை பழங்கள் விலை குறைந்துள்ளது. மாவட்டத்தில் பெரியகுளம், சோத்துப்பாறை, கும்பக்கரை, அகமலை, அடுக்கம், போடி, ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உட்பட பல பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி உள்ளது. எலுமிச்சை பழங்கள் விளைச்சலில் நாட்டு ரக செடிகள், ஒட்டுரக செடிகள் உள்ளன. இப்பகுதிகளில் விளையும் எலுமிச்சை பழங்கள் உள்ளூர் தேவைக்கு பின் மதுரை, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் கேரளாவுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேவை அதிகரிப்பால் எலுமிச்சை பழங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்தது. தற்போது பயன்பாடு குறைந்த நிலையில் விளைச்சலும் அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைந்து வருகிறது. எலுமிச்சை வியாபாரிகள் கூறியதாவது: நாட்டு ரக செடிகளில் ஆண்டு முழுவதும் காய்ப்பு கிடைக்கும். ஒட்டு ரக செடிகளில் மழை, பனி காலங்களில் மட்டும் காய்ப்பு அதிகம் இருக்கும். தேனி மாவட்டத்தில் இருந்து தினமும் 10 டன் அளவிலான எலுமிச்சை பழங்கள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில வாரங்களில் ரூ.250 வரையும், ஒரு பழம் ரூ.10 முதல் 15 வரையும் விலை இருந்தது. தற்போது கிலோ ரூ.100 வரை குறைந்துள்ளதால் ஒரு பழம் ரூ.5 முதல் 7 வரை விலை உள்ளது. எலுமிச்சை பழங்கள் விற்பனை குறைந்ததால் விவசாயிகள், வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வெயில் காலம் துவங்கியதும் எலுமிச்சை பழங்களின் தேவை அதிகமாகும். இவ்வாறு கூறினர்.