மேகமலை பகுதியில் அதிக சத்தத்துடன் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டுகோள்
கம்பம்: மேகமலை புலிகள் காப்பக மலையடிவார கிராமங்களில் வன உயிரினங்களின் நலன் கருதி அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையும், இயற்கை ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அதிக ஆர்வம் காட்டுவார்கள். தற்போது அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் பயன்பாட்டில் உள்ளன. இதனால் சுற்றுப்புறச் சூழல் மாசுபடும் என்பதால் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே வெடிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேகமலை புலிகள் காப்பகம் மலையடிவார கிராமங்களில் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பதை வன உயிரினங்களின் நலன் கருதி தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சின்னமனூர் அருகே உள்ள எரசை, காமாட்சிபுரம், சின்ன ஒவுலாபுரம், தென்பழனி, அரசரடி, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி ஹைவேவிஸ், இரவங்கலாறு, மகாராசா மெட்டு, வெண்ணியாறு உள்ளிட்ட மலையடிவார கிராமங்களில் வசிப்பவர்கள் இந்த வேண்டுகோளை ஏற்றுள்ளனர். அதிக சத்தத்துடன் பட்டாசு வெடிப்பதால், வன உயிரினங்கள் அச்சத்தில் வனப்பகுதிக்குள் வேகமாக ஓடும். அதனால் வன உயிரினங்களுக்கு தவறி விழுந்து காயம் ஏற்படுவது உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்படும் என்றனர்.