| ADDED : நவ 14, 2025 01:44 AM
பொன்னேரி: பொன்னேரி - பழவேற்காடு சாலையோரத்தில், ஊராட்சியின் குப்பை கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசி வருவதுடன், அவற்றில் உணவு தேடி வரும் நாய் மற்றும் மாடுகளால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர். பொன்னேரி - பழவேற்காடு சாலையில் உள்ள கொடிமரம் பேருந்து நிறுத்தம் அருகே, சாலையோரங்களில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இவற்றில் உள்ள காய்கறி, இறைச்சி கழிவுகளை உண்பதற்காக, நாய் மற்றும் மாடுகள் அங்கே கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இந்த கால்நடைகள் சாலையை திடீரென கடக்கும்போதும், ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொள்ளும் போதும், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். ஒரு சிலர் கால்நடைகள் மீது மோதி, சிறு சிறு விபத்துகளில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். பழவேற்காடு ஊராட்சி நிர்வாகம், குப்பை கழிவுகளை முறையாக கையாளாமல், சாலையோரங்களில் கொட்டி குவித்து வருகிறது. இது, பழவேற்காடு சுற்றுலா பயணியரை முகம்சுளிக்க வைப்பதுடன், கழிவுகளில் உணவு தேடும் கால்நடைகளால், வாகன ஓட்டிகளும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.