பழவேற்காடு: பழவேற்காடு - காட்டுப்பள்ளி இடையே உள்ள கிழக்கு கடற்கரை சாலை சேதமடைந்ததை தொடர்ந்து, 15 மீனவ கிராமங்களின் நீண்டகால போராட்டத்தின் பயனாக, தற்போது 23 சிறுபாலங்களுடன், 11.2 கி.மீ.,க்கு, 17.50 கோடி ரூபாயில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுவதால், 15 ஆண்டு பிரச்னைக்கு விமோசனம் கிடைக்க உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவ பகுதியில், 35க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இதில், கடலை ஒட்டியுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் லைட்அவுஸ்குப்பம், அரங்கம், வைரவன்குப்பம், காளஞ்சி, காட்டுப்பள்ளி என, 15 மீனவ கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களை சேர்ந்தவர்கள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு, பழவேற்காடு வந்து செல்ல வேண்டும். பேருந்து வசதியில்லாத நிலையில், மீனவ கிராமத்தினர் இருசக்கர வாகனங்ககளையே நம்பியுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை, 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாகவும், ஜல்லிக் கற்கள் பெயர்ந்தும், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இதனால், மீனவ மக்கள் சிரமத்துடன் சென்று வந்தனர். மேலும், காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணுார் காமராஜர் துறைமுகம், அதானி துறைமுகம், கப்பல் கட்டும் தளம், வடசென்னை அனல்மின் நிலையங்கள், எரிவாயு முனையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிக்கு செல்வோரும் கடும் அவதிப்பட்டு வந்தனர். இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, 15 ஆண்டுகளாக மீனவ மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த 2023ல், ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இச்சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறையின் கிராம சாலைகள் பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 17.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது பழவேற்காடு லைட்அவுஸ்குப்பம் முதல் காட்டுப்பள்ளி வரை, சாலையை புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. இச்சாலைகள் முழுமையாக பெயர்த்து எடுக்கப்பட்டு, 3.75 மீ., அகலம், 11.2 கி.மீ., தொலைவிற்கு, ஜல்லிக் கற்கள் கொட்டி, சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. சாலையின் குறுக்கே மழைநீர் செல்வதற்காக, 23 இடங்களில் சிறுபாலங்கள் அமைக்கப்படுகின்றன. ஐந்து அடுக்குகளாக, 50 செ.மீ., உயரத்தில் சாலை அமைக்கப்படுகிறது. சிறு பாலங்களுக்கான கட்டுமான பணிகள், ஜல்லிக் கற்களை கொட்டி இயந்திரங்கள் உதவியுடன் பரப்பி சமன்படுத்துவது, சாலையோரங்களை பலப்படுத்துவது என, பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. இதுகுறித்து, மீனவ கிராம மக்கள் கூறியதாவது: தற்போது சாலை உயரமாக அமைக்கப்படுவதால், இருபுறமும் தாழ்வாக இருக்கும். சாலை முழுதும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். மேலும், சாலை பணிகள் முடிந்தவுடன், இந்த வழித்தடத்தில் சென்னை பாரிமுனை வரை அரசு பேருந்துகளை இயக்கினால், மீனவ மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிப்ரவரியில் பணி நிறைவு பெறும்
கிராம சாலை திட்ட அதிகாரி கூறியதாவது: மீனவ மக்களின் நீண்டகால கோரிக்கையின் பயனாக, தற்போது இச்சாலை கூடுதல் தரத்துடன் அமைகிறது. தேவையான இடங்களில், சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள் அமைப்பது, மின்விளக்குள் பொருத்துவது என, திட்டமிடப்பட்டு உள்ளோம். பணிகள் முடிப்பதற்கான காலஅவகாசம், ஏப்ரல் மாதம் வரை உள்ளது. ஆனால், பிப்ரவரி மாத இறுதிக்குள் பணிகளை முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.