பழவேற்காடு: பழவேற்காடில் 40,000க்கும் மேற்பட்ட வங்கி பயனாளர்கள் உள்ள நிலையில், இங்கு ஒரேயொரு வங்கி மட்டும் இருப்பதால், பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில், கூடுதலாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை அமைக்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழவேற்காடு மீனவப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில், இந்தியன் வங்கி மட்டுமே உள்ளது. இதில், மீனவர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள், கல்லுாரி மாணவர்கள், வணிகர்கள் என, 40,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதிகப்படியான வாடிக்கையாளர்கள் உள்ளதால், வங்கி சேவைகள் குறித்த நேரத்தில் பெற முடியாமல் மீனவ மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், பல்வேறு அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கும், வங்கி கடன், நகைக்கடன் உள்ளிட்டவைகளை பெறுவதற்கும் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் கூடுதலாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை ஒன்றை அமைத்து தரவேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது: இங்குள்ள இந்தியன் வங்கியில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில், குறைந்த பணியாளர்கள் இருப்பதால், சேவைகள் குறித்த நேரத்தில் கிடைப்பதில்லை. நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளன. மற்றொரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை இருந்தால், மீனவர்களுக்கு வங்கி சேவைகள் எளிதாகும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.