மக்காச்சோளம் பயிரிட்டு அதிக வருவாய் ஈட்டலாம்: குறைதீர் கூட்டத்தில் ஆலோசனை
பொன்னேரி: 'மக்காச்சோளம் பயிரிட்டு, குறுகிய காலத்தில் அதிக வருவாய் ஈட்டலாம்' என, குறைதீர் கூட்டத்தில், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. பொன்னேரி சப் - கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் ரவிகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்று, பல்வேறு பிரச்னைகள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இக்கூட்டத்தில், கும்மிடிப் பூண்டி அருகே தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் எஸ்.எல்.பி., எத்தனால் தொழிற்சாலையின் வேளாண் பிரிவு உதவி மேலாளர் முருகானந்தம் பங்கேற்று, மக்காச் சோளம் வளர்ப்பு குறித்து விரிவாக பேசினார். மக்காச்சோளம் வளர்ப்பிற்கான பயிர்காலம், தேவையான மருந்தினங்கள், மகசூல் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் கூறியதாவது: எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளத்திற்கான தேவை அதிகம் உள்ளது. நிலையான மற்றும் குறைந்த காலத்தில் அதிக வருவாய் தரக்கூடிய மக்காச்சோளத்தை விவசாயிகள் பயிரிடலாம். வடிகால் வசதி உள்ள அனைத்து விவசாய நிலங்களிலும், எந்த பருவத்திலும் இதை பயிரிடலாம். ஒரு ஏக்கருக்கு, 3,000 --------- 4,000 கிலோ சாகுபடி செய்யலாம். தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதுடன், விளைவிக்கும் மக்காச்சோளத்தை இடைத்தரகர் இன்றி எங்கள் நிறுவனமே பெற்றுக்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.