பொன்னேரி: 'டிட்வா' புயல் காரணமாக பொன்னேரி, பழவேற்காடு, அத்திப்பட்டு, மீஞ்சூர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் கனமழை இருந்தது. நேற்று மாலை வரை, 13 -15 செ.மீ., மழை பதிவானது. அதிகபட்சமாக சோழவரம், ஞாயிறு பகுதிகளில், 15 செ.மீ., மழை பொழிவு இருந்தது. இதனால், சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்தன. அத்திப்பட்டு புதுநகரில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் தாழ்வான பகுதியில் உள்ளன. தொடர் மழையின் காரணமாக, குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கும்மிடிப்பூண்டி கும்மிடிப்பூண்டி நகரின் முக்கிய நீராதாரமான தாமரை ஏரியில், தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்து சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் என, பல்வேறு தரப்பினர் ஆய்வு மேற்கொண்டனர். பின், சிப்காட் வளாகத்தில் இருந்து தாமரை ஏரிக்கு மழைநீர் வரும் கால்வாயில், கழிவுநீர் கலந்து வருவதை தொடர்ந்து, அதை மூடி நடவடிக்கை எடுத்தனர். நேற்று அதிகாலை முதல் கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பொழிந்தது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. சிப்காட் சாலையிலும் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து, தாமரை ஏரிக்கு செல்லும் கால்வாய் மூடப்பட்டிருந்த நிலையில், அதை அகற்றிவிட்டு, சாலைகளில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டது. சாலைகளில் தண்ணீர் வடிந்த பின் போக்குவரத்து சீரானது. ஐந்து மணி நேரத்தில் 10 செ.மீ., மழை பொன்னேரியில் நேற்று அதிகாலை முதல் லேசான மழை பொழிவு இருந்தது. அவ்வப்போது கனமழை பெய்தது. பகல் 12:00 மணி வரை, 2.5 செ.மீ., மழை மட்டுமே பதிவாகியிருந்தது. அதன்பின், பிற்பகலில் இடைவிடாது அதிகனமழை பெய்து, மாலை 5:00 மணி வரை நீடித்தது. பகல் 12:00 முதல் மாலை 5:00 மணி வரை, 10 செ.மீ., மழை பதிவானது. ஐந்து மணி நேரத்தில், 10 செ.மீ, மழை கொட்டி தீர்த்தது.