| ADDED : டிச 02, 2025 04:26 AM
பொன்னேரி: கனமழையின் காரணமாக, ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணித்து வருகின்றனர். பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில் உள்ள திருவாயற்பாடி பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. பொன்னேரி - பழவேற்காடு வழித்தடத்தில் உள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், பல்வேறு பகுதிகளுக்கு வந்து செல்வதற்கான பிரதான நுழைவாயிலாக இந்த சுரங்கப்பாதை உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால், சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதில், வாகனங்கள் தத்தளித்தப்படி பயணித்து வருகின்றன. ஒரு சில இருசக்கர வாகனங்கள் தேங்கிய தண்ணீரில் சிக்கி பழுதாகி நின்றன. அவற்றை, வாகன ஓட்டிகள் தள்ளிக்கொண்டு செல்லும் நிலையும் ஏற்பட்டது. ஒரு சிலர், சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி இருப்பதை கண்டு, மாற்று வழித்தடங்களில் சென்றனர். எனவே, பொன்னேரி நகராட்சி நிர்வாகத்தினர், மோட்டார்கள் மூலம் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.