| ADDED : டிச 02, 2025 04:42 AM
திருத்தணி: சென்னை- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூரில் இருந்து திருத்தணி பொன்பாடி வரை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தற்போது, இரு வழிச்சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. நேற்று திருத்தணி ஒன்றியம் தரணிவராகபுரம், முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த, 40க்கும் மேற்பட்டோர், நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது, 'எங்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காமல், சாலை விரிவாக்கம் செய்வதற்கு அனுமதிக்க மாட்டோம்' என, கோஷம் எழுப்பினர். இதையடுத்து, திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், நேற்று சாலை விரிவாக்க பணிகள் நடைபெறவில்லை.