உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  திருவள்ளூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தரைதளம், கூரை அமைக்க தனி டெண்டர்

 திருவள்ளூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தரைதளம், கூரை அமைக்க தனி டெண்டர்

திருவள்ளூர்: திருவள்ளூர் ராஜாஜி சாலையில், தற்போது செயல்பட்டு வரும் திரு.வி.க., பேருந்து நிலையம், 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அப்போதைய போக்குவரத்து வசதிக்கு ஏற்ப பேருந்து நிலையம் கட்டப்பட்டது. தற்போது, மாவட்ட தலைநகராக இருப்பதாலும், ஏராளமான குடியிருப்புகள் உருவாகி இருப்பதாலும், திருவள்ளூர் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. பள்ளிகள், வணிக நிறுவனங்களின் அதிகரிப்பால், நகரில் போக்குவரத்தும் அதிகரித்து விட்டது. அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில் செயல்பட்டு வரும் திரு.வி.க., பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி, கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளுக்கும், பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் நுாற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படும் நிலையத்தில், ஒரே நேரத்தில், 10 பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும். நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழி குறுகலாக இருப்பதால், பேருந்துகள் உள்ளே சென்று, வெளியில் வர சிரமப்படுகின்றன. இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, 2019ம் ஆண்டு, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகே உள்ள வேடங்கிநல்லுாரில், 5 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு நகராட்சி சார்பில், 33 கோடி ரூபாய் மதிப்பில் பேருந்து நிலைய பணி துவங்கியது. இதை, 'ஏ' கிரேடு பேருந்து நிலையமாக உயர்த்தும் வகையில், ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிற்கும் அளவிற்கு, 5,889 ச.மீ., பரப்பளவில் கட்டுமான பணி நடந்து வருகிறது. தரைதளம் மற்றும் மாடி என, 2,493 ச.மீட்டரில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில், வெளியூர் பேருந்து -45, நகர பேருந்து- 11 என, 56 பேருந்துகள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், இரு உணவகம் மற்றும் 101 கடைகள் கட்டப்பட்டுள்ளன. பயணியர் வசதிக்காக, 550 இருசக்கர வாகனம், 16 கார்கள் நிறுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கட்டுமான பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், பேருந்து நிலையத்திற்கான இணைப்பு சாலை மற்றும் தரைதளம், மேற்கூரை அமைக்க, கூடுதலாக 3.91 கோடி ரூபாய் தேவைப்பட்டது. நிதி கிடைக்க ஏற்பட்ட தாமதத்தால், பேருந்து நிலைய கட்டுமான பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து, நகராட்சி அலுவலர் கூறியதாவது: பேருந்து நிலையத்தில் தார்ச்சாலை அமைக்க முடிவெடுக்கப்பட்ட நிலையில், தற்போது, கான்கிரீட் சாலை அமைக்க கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். அப்பணிக்காகவும், இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தும் இடத்தில் கூரை அமைக்கவும், நகராட்சி நிர்வாக ஆணையரகம், 2025 - 26ம் ஆண்டு இடைவெளி நிரப்பல் திட்டத்தின் கீழ், 3.91 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. கடந்த மாதம், இதற்காக தனி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. பெறப்பட்ட ஒப்பந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்து, தகுதிவாய்ந்த நபரிடம் பணி ஒப்படைக்கப்படும். அதன்பின், தரைதளம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை