பொன்னேரி: பொன்னேரி போக்குவரத்து காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் மற்றும் கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னேரி காவல் நிலையம் கடந்தாண்டு பிப்., மாதம், ஆவடி போலீஸ் கமிஷனரகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. கடந்தாண்டு இறுதியில் இருந்து, போக்குவரத்து காவல் நிலையம் செயல்படுகிறது. இங்கு, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., இரண்டு போலீசார் பணியில் உள்ளனர். போக்குவரத்து காவல் நிலையம் உருவாக்கப்பட்ட நிலையில், அதற்கான அலுவலக கட்டடம் இதுவரை அமைக்கப்படவில்லை. போக்குவரத்து நெரிசல், விபத்து குறித்து புகார் தெரிவிக்க, செங்குன்றம் காவல் நிலைய பகுதிக்கு செல்லும் நிலையே உள்ளது. போக்குவரத்து போலீசாரும், அலுவலக பணிகளை மேற்கொள்வதற்கு இடமில்லாமல் தவிக்கின்றனர். மேலும், போக்குவரத்து போலீசாரின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. போக்குவரத்து காவல் நிலையத்திற்கு புதிய அலுவலக கட்டடம் மற்றும் கூடுதல் போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பொன்னேரி தாலுகா தலைமையிடமாக உள்ளது. இங்கு, ஆறு நீதிமன்றங்கள், சப் - கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. இவற்றிற்கு வரும் வாகனங்கள், ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மீஞ்சூர், அத்திப்பட்டு, காட்டுப்பள்ளி பகுதிகளில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள், பொன்னேரி நகருக்குள் வந்து செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவற்றை கண்காணிக்க, போதிய போக்குவரத்து போலீசார் இல்லை. இருக்கும் சில போலீசாரும் விதிமீறல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து, அபராதம் விதிக்கும் பணிகளிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். பொன்னேரி நகரில் காலை - மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. எனவே, பொன்னேரி போக்குவரத்து காவல் நிலையத்திற்கு கூடுதல் போலீசாரை நியமிக்கவும், அலுவலகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.