| ADDED : டிச 02, 2025 04:46 AM
திருத்தணி: திருத்தணி தாசில்தார் அலுவலகத்திற்கு ஜெனரேட்டர் வசதியில்லாததால், மின்தடை ஏற்படும் போது பணி பாதிக்கப்பட்டு வருகிறது. திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில், மொத்தம் 74 வருவாய் கிராமங்கள் உள்ளன. அலுவலக வளாகத்தில் தேர்தல் பிரிவு, வட்ட வழங்கல், சமூக பாதுகாப்புத் துறை, இ- - சேவை, ஆதார் மையம் உட்பட பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகத்திற்கு தினமும் பல்வேறு சான்றுகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் பெற, 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். தாலுகா அலுவலகத்தில் ஜெனரேட்டர் வசதியில்லாததால், மின்தடை ஏற்படும் போது பணிகள் முழுமையாக பாதிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் காலை 9:00 - மாலை 5:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், தாசில்தார் அலுவலகத்தில் எந்த பணிகளும் நடக்காமல் முடங்கியது. மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் மின் வினியோகம் நிறுத்தப்படுவதால், தாலுகா அலுவலகத்தில் எவ்வித பணிகளும் நடக்காமல் உள்ளதால், மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடனே நடவடிக்கை எடுத்து, தாசில்தார் அலுவலகத்திற்கு ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்திதர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.