கூலித்தொழிலாளிகள் ஆபத்தான பயணம் விழிப்புணர்வு ஏற்படுத்துமா காவல் துறை?
திருவாலங்காடு: டிராக்டர் மற்றும் லோடு வாகனத்தின் மீது அமர்ந்து, ஆபத்தான முறையில் பயணம் செய்வது அதிகரித்துள்ளது. இதுகுறித்து, காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் --- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை வழியாக, தினமும், 30,000க்கும் மேற்பட்ட வாகனங்கள், திருவள்ளூர், சென்னை, திருத்தணி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றன. திருவாலங்காடு வழியாக செல்லும் இந்த நெடுஞ்சாலையில், கட்டுமான பொருட்கள், காய்கறி, பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் லாரி, செங்கல் ஏற்றி செல்லும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் பொருட்களை ஏற்றி, இறக்க வரும் தொழிலாளிகள், அதே வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், ஆபத்தான நிலையில் வாகனத்தின் மேற்புறத்தில் அமர்ந்தும், சிலர் மூட்டைகள் மீது படுத்தும் பயணிக்கின்றனர். இதனால், அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், விதிமீறும் வாகனங்கள் பறிமுதல் செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.