| ADDED : டிச 02, 2025 04:39 AM
திருத்தணி: நீர்வளத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், பருவமழை போதிய அளவுக்கு பெய்தும், தாடூர் ஏரி மட்டும் தண்ணீரின்றி வறண்டுள்ளது என, விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். திருத்தணி வருவாய் கோட்டத்தில் 79 ஏரிகளை நீர்வளத்துறையினர் பராமரித்து வருகின்றனர். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை திருத்தணி கோட்டத்தில் பெய்ததால், பெரும்பாலான ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், 15க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் நிரம்பி, கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது. ஆனால், திருத்தணி ஒன்றியம் தாடூர் ஏரியில் தற்போதும் தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளது. ஏரியில் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மேலும், நீர்வரத்து கால்வாய்கள் புதைந்துள்ளதால், தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். இந்த ஏரியில் இருந்து ஆழ்துளை கிணறுகள் அமைத்து, ஊராட்சி நிர்வாகத்தால் தாடூர் கிராமத்திற்கு குழாய்கள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. அதன்பின், தெருக்குழாய்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது பருவ மழை பெய்தும் ஏரியில் தண்ணீர் இல்லாததால், தாடூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தாடூர் ஏரியின் நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்காமல், நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக விவசாயிகள் சரமாரியாக குற்றஞ்சாட்டினர். எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், தாடூர் ஏரியை ஆய்வு செய்து, நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.