| ADDED : டிச 02, 2025 01:11 AM
ஆம்பூர்: ஆம்பூர் அருகே, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில், மாமியார், மருமகன் உயிரிழந்தனர். கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் திவ்யமோன், 50. இவரது மனைவி லவ்லி, 47, அவரது தாய் ரோஸ்லி, 72, ஆகியோருடன் நேற்று காலை, ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, 'மஹிந்திரா' காரில் சென்றார். காரை லவ்லி ஓட்டினார். திருப்பத்துார் மாவட்டம், சென்னை - பெங்களூரு சாலையில், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலத்தில், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கார் சென்ற போது, சாலையோரம் நின்ற சரக்கு லாரி மீது, லவ்லி ஓட்டி சென்ற கார் மோதியது. இந்த விபத்தில், திவ்யமோன், ரோஸ்லி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லவ்லி துாக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.