உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நம்பிக்கை கரைகிறது!

நம்பிக்கை கரைகிறது!

''அதிகாரிகள்ட்ட மனு கொடுத்துட்டு வந்தாச்சு... இனி பாரு... மின்னல் வேகத்துல பணி நடக்கும்''இப்படி யாராவது சொன்னால், நகைப்பு நம்மிடம் பிறக்கும்.''எந்த ஊர்லயும், இப்படி நடக்காது; கனவுலயே மிதக்காதீங்க'' என்ற பதிலுடன் நகர்வோம்.''மின்னல் வேகத்தில் அல்ல... ஆமை வேகத்தில் கூட மனு மீதான நடவடிக்கைகள் இருப்பதில்லை'' என்ற குற்றச்சாட்டை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சமீப காலமாக முன்வைக்கின்றனர். தீர்வுகாணப்படாத மனுக்களால், மக்களின் நம்பிக்கை கரைகிறது; அவர்களது மனசு வலிக்கிறது.நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக்கூட்டத்தின்போது, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து பேசிய மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி(டி.ஆர்.ஓ.,), கார்த்திகேயன், 'மனுக்கள் தேக்கம்' குறித்து பொறிந்து தள்ளினார்.இதோ, அவர் கூறியவை:'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் பெறப்பட்டுள்ள, 5,960 மனுக்களில், 700 மனுக்களுக்கு மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுத்துறை அதிகாரிகள், சிறப்பு கவனம் செலுத்தி, ஒவ்வொரு மனு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு மேல் மட்டத்தில் இருந்தும், மனு மீதான நடவடிக்கையை கண்காணிக்கிறது. மாநில அளவில், திருப்பூர் மாவட்டத்தில்தான், அதிக எண்ணிக்கையிலான மனுக்கள் தேக்கமடைந்துள்ளன. ஒவ்வொரு அரசுத்துறையிலும், அதிக மனுக்கள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, வருவாய்த்துறையில், 80 சதவீத மனுக்கள் தேக்கமடைந்துள்ளன.

'நிராகரிக்கப்படுகிறது'இப்படிச் சொல்லாதீங்க

முதல்வரின் முகவரி மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டங்களில் பெற்ற மனுக்களில், 39, 263 மனுக்கள் நிலுவையில் உள்ளன. மனுக்களை ஆராய்ந்து பார்க்காமல், 'நிராகரிக்கப்படுகிறது' என்ற ஒரே வார்த்தையை பயன்படுத்தி தள்ளுபடி செய்யக்கூடாது.மனு மீதான நடவடிக்கை குறித்து, தெளிவாக பதில்களை தெரிவிக்க வேண்டும். போலீஸ், வருவாய்த்துறை, பதிவுத்துறை என, அனைத்து துறைகளிலும் மனுக்கள் தேங்கியுள்ளன. ஏன் மனு மீது நடவடிக்கை தாமதம் என்று தெரியவில்லை. மனு மீது, அரசு அலுவலர்கள் அளிக்கும் பதில்கள், ஏற்புடையதாக இருக்க வேண்டும்.

சிறப்பாக கூட வேண்டாம்சரியானதே தேவை

மனுக்கள் தொடர்பாக, கலெக்டர், டி.ஆர்.ஓ., மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை தாசில்தார் தான் அரசுக்கு பதில் கூற வேண்டும். சிறப்பான நடவடிக்கையை கூட நாங்கள் எதிர்பார்க்கவில்லை; சரியான நடவடிக்கையாவது இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, டி.ஆர்.ஓ., பேசினார்.அமைப்பினர் கருத்துகள் (பக்கம் -4)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை