உடுமலை - பழநி ரோட்டில் மையத்தடுப்பு அமைக்கணும்!
உடுமலை: உடுமலை, பழநி ரோட்டில், சிதிலமடைந்த நடைபாதையை புதுப்பிக்கவும், விபத்துக்களை தடுக்கவும் மையத்தடுப்பு அமைக்க வேண்டும். உடுமலை - பழநி தேசிய நெடுஞ்சாலையில், தனியார் கல்லுாரி மற்றும் 4 தனியார் பள்ளிகள் உள்ளன.மேலும், அண்ணா குடியிருப்பு உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புகளும், பி.எஸ்.என்.எல்., அலுவலகம், குடியிருப்பு மற்றும் அரசு ஊழியர் குடியிருப்புகள் இப்பகுதியில் உள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகள் உள்ளதால், தினமும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் வந்து செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையை எளிதாக கடக்கவும், விபத்துக்களை தடுக்கும் வகையிலும், ரோட்டோரத்தில் நடைபாதை அமைக்கப்பட்டது. அவை பராமரிக்கப்படாததால், முட்புதர் செடிகள் முளைத்தும், புதர் மண்டியும் காணப்படுகிறது. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் பிரதான போக்குவரத்து ரோட்டையை பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது.அதே போல், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த ரோட்டில், மாணவர்கள், பொதுமக்கள் எளிதாக கடக்க முடியாத நிலை உள்ளது. அதிவேகமாக வரும் வாகனங்களால், விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் மையத்தடுப்புகள் அமைக்கவும், மாணவர்க ள் ரோட்டை கடக்கும் வகையில் எச்சரிக்கை குறியீடு மற்றும் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தினர்.