| ADDED : டிச 02, 2025 07:01 AM
திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மூன்றாவது முறையாக நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால்பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் - பல்லடம் ரோட்டில், ஏழு தளங்களுடன் கலெக்டர் அலுவலக வளாகம் செயல்படுகிறது. அருகிலேயே, எஸ்.பி., - மாவட்ட கோர்ட் வளாகங்களும் அமைந்துள்ளன. குறைகேட்பு கூட்ட நாளான நேற்று, கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில், குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு இடங்களில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக, இ-மெயிலில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால், வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார், மோப்பநாய் சுல்தானுடன் சோதனையில் ஈடுபட்டனர். இரண்டாவது தளத்தில், கலெக்டரின் அறை, டி.ஆர்.ஓ. அறை உள்பட அலுவலகங்கள், தரைத்தளம் உள்பட வளாகம் முழுவதும் சோதனையிட்டனர். இதனால், அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே ஆக. 28 மற்றும் நவ. 19 ஆகிய தேதிகளிலும் இதுபோன்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. தற்போது மூன்றாவது முறையாக, மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு சர்வர்கள் வாயிலாகவும், 'டார்க் வெப்' வாயிலாக இ-மெயில் அனுப்பப்படுவதால், மிரட்டல் விடும் ஆசாமிகளை கண்டுபிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர்.