உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதிய உச்சம் நோக்கி தேங்காய் விலை

புதிய உச்சம் நோக்கி தேங்காய் விலை

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், சாகுபடி செய்யப்படும் தேங்காய், கொப்பரை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. கொப்பரை தேங்காய் தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தேங்காய் உற்பத்தி குறைவு, கொப்பரை உற்பத்தி இல்லை போன்ற காரணங்களால், தற்போது, விலை வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் 205 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கொப்பரை, 225 ரூபாயாக உயர்ந்து உச்சத்தை தொட்டுள்ளது.

உற்பத்தியின்மையால்விலை கிடுகிடு உயர்வு

தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலச்சங்க பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:தேங்காய் சீசன் துவங்கியும், இந்தாண்டு கொப்பரை, தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தேவைகளுக்கேற்ப உற்பத்தி இல்லாததால், விலை வேகமாக உயர்ந்து வருகிறது.தற்போது, பருவமழை பெய்ய துவங்கியுள்ளதால் கொப்பரை உற்பத்தி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால், எதிர்பாராத விதமாக கொப்பரை விலை, 225 ரூபாயை கடந்துள்ளது.காங்கயம் மார்க்கெட் நிலவரப்படி கடந்த 9ம் தேதி, ஒரு டின் (15 கிலோ) தேங்காய் எண்ணெய், 5,200 ரூபாய், ஒரு கிலோ தேங்காய் பவுடர், 300 ரூபாய், ஒரு கிலோ முதல் தர கொப்பரை, 225 ரூபாய், இரண்டாம் தர கொப்பரை, 220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.எண்ணெய், கொப்பரை விலை உயர்வால், ஒரு டன் முதல் தர தேங்காய் (கருப்பு) 70 ஆயிரம் ரூபாய்க்கும், இரண்டாம் தர (பச்சை) தேங்காய், 66 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்துக்கு நிகராகதேங்காய் விலை

சீசன் உள்ள நேரத்திலும், உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலைக்கு நிகராக, தேங்காய் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.இனி பண்டிகை காலங்கள் துவங்க உள்ள நிலையில், கொப்பரை விலை, 240 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ