உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ரூ.49 லட்சம் சுருட்டிய சைபர் மோசடி கும்பல்; வங்கி மற்றும் கார் ஷோரூமை ஏமாற்றி தகிடுதத்தம்

 ரூ.49 லட்சம் சுருட்டிய சைபர் மோசடி கும்பல்; வங்கி மற்றும் கார் ஷோரூமை ஏமாற்றி தகிடுதத்தம்

தி ருப்பூரில் உள்ள கார் ஷோரூம் போன் எண்ணுக்கு ஒருவர் அழைக்கிறார். ''இருபது கார் வரைக்கும் வாங்கணும்... விவரங்கள் வேணும்'' என்று சொல்ல, மகிழ்ச்சியுடன் ஊழியர், கார்கள் குறித்த விவரங்களைப் பகிர்கிறார். 'பேங்க் மூலமாதான் பணம் அனுப்புவோம்... உங்க அக்கவுண்ட் விவரத்தை கொடுங்க... பேங்க்லயும் விசாரிப்போம்... அங்கேயும் ஒரு வார்த்தை சொல்லீருங்க'' என்று போனில் அழைத்தவர் கூறுகிறார். ஷோரூம் நிர்வாகத்தினரும் சம்மதிக்கின்றனர். ேஷாரூம் நிர்வாகத்தினருக்கு, கார் விற்பனையாகிறதே என்பதில் மகிழ்ச்சி; ஆனால், போனில் அழைத்தவர் மோசடி நபர் என்பதை அறியவில்லை. இதனால் வங்கிக்கணக்கு எண் போன்ற விவரங்களை அந்த நபரிடம் அளித்து விடுகின்றனர். இதைப் பயன்படுத்திக்கொண்டு, குமரன் ரோட்டில் உள்ள வங்கியை போனில் தொடர்பு கொள்கிறார்கள், மோசடிக் கும்பலை சேர்ந்தவர்கள். அந்த போன் எண், ட்ரூ காலரில், 'கார் ஷோரூம்' என்று காட்டுவது போல், ஏற்கனவே 'செட்' செய்துவைத்திருந்தனர். நம்பகப் பேச்சு 'கார் ஷோரூமோட உரிமையாளர் நான்... செக்லீப் தீர்ந்திருச்சு... ஒரு மூனு அக்கவுண்ட்க்கு அர்ஜன்டா பணம் அனுப்பணும்; விவரங்களை மெயில் அனுப்பியிருக்கோம்; ஆர்.டி.ஜி.எஸ். பார்ம்ல அப்புறம் வந்து கையெழுத்து போடுறேன்'' என்று சொல்கிறார், மோசடி ஆசாமி. வங்கி அதிகாரிகள் நம்பும் வகையில், மோசடி ஆசாமிகளின் பேச்சு இருந்தது. ஏற்கனவே உருவாக்கிவைத்திருந்த போலி இ மெயில் முகவரி மூலம், மூன்று வங்கிக்கணக்கு எண்களை அனுப்புகின்றனர். இதை நம்பி வங்கி தரப்பில், 49 லட்சம் ரூபாய் வேறு கணக்குக்கு மாற்றப்படுகிறது. (இந்த மூன்று வங்கிக்கணக்குகளையும் மோசடி ஆசாமிகள், இதற்காக ஒரு வாரம் முன்பு தான் துவக்கியிருக்கின்றனர்). ஏமாற்று வலை அன்று மாலை வங்கி கணக்கு வைத்துள்ள கார் ஷோரூம் உரிமையாளர், வங்கிக்கு நேரடியாக சென்று, 'இவ்ளோ பணம் எப்படிப்போச்சு' என்று அதிர்ச்சியுடன் கேட்ட போது தான், வங்கியினர், ஏமாற்று நபர்களின் வலையில் சிக்கி ஏமாந்தது தெரிந்தது.

போலீஸ் அதிரடி

திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். உடனடி நடவடிக்கையால் பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட, 49 லட்சம் ரூபாயில், 32 லட்சம் ரூபாயை மட்டும் எடுக்க முடியாதவாறு கணக்கை முடக்கினர். இதுதொடர்பாக விசாரித்து, தனிப்படை போலீசார் பீஹாருக்கு சென்று, ஒரு வார காலம் தங்கி, கைவரிசை காட்டிய கும்பல் குறித்து விசாரித்தனர். அதில், வேறு ஒரு மோசடி வழக்கில் இக்கும்பல் சிக்கி சிறையில் இருப்பது தெரிந்தது. ரவிக்குமார், 23, விவேக்குமார், 21, விகாஷ்குமார் சோனி, 26, சன்னி குமார், 22, மனிஷ்குமார், 35 என, ஐந்து பேரையும் கோர்ட் அனுமதியோடு, திருப்பூர் அழைத்து வந்து விசாரித்து இந்த வழக்கிலும் கைது செய்தனர். கைவரிசை காட்டப்பட்ட, 49 லட்சம் ரூபாயும், முழுமையாக மீட்கப்பட்டது. ''தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் என, அனைவரும் எந்தக் காரணத்தை கொண்டும், தங்கள் வங்கி விவரங்களை முகம் தெரியாத நபர்களிடம் பகிரக் கூடாது. மிகவும் கவனமாக இருக்க வேண்டும்'' என்று கூறுகின்றனர் சைபர் கிரைம் போலீசார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை