திருப்பூர்: திருப்பூர் - காங்கயம் ரோட்டில், வரும், 17ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலைத்துறையினர் 'நோட்டீஸ்' வினியோகித்துள்ளனர். திருப்பூரில், ஆண்டுக்கு ஆண்டு மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரம் கடைகள், வணிக நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப சாலை விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டாலும், தினம், தினம், புதிது புதிதாக சாலையோரங்களில் கடைகள் முளைக்கின்றன. ஏற்கனவே உள்ள கடைக்காரர்கள், தங்கள் எல்லையை தாண்டி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக கடைகளை வைத்துள்ளனர். இதனால், மக்கள் நடமாடவும், வாகன போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. அவ்வப்போது, விபத்தும் நேரிடுகிறது. திருப்பூரில் இருந்து அவிநாசி, காங்கயம், பல்லடம் செல்லும் அனைத்து ரோடுகளிலும், இத்தகைய ஆக்கிரமிப்புகளால் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. 'ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக்கத்தின் பயன் மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் கிடைக்கும் வகையிலான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என, கடந்த, முதல் தேதி, 'தினமலர்' நாளிதழில், செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து, திருப்பூர் வடக்கு உதவி கோட்ட நெடுஞ்சாலைத் துறையினர் சார்பில், திருப்பூர் - காங்கயம் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களுக்கு, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் வழங்கிய நோட்டீஸில் கூறியுள்ளதாவது: திருப்பூர் - காங்கயம் சாலையில், ஸ்ரீகணபதி நர்சிங் ேஹாம் முதல், நாச்சிபாளையம் வரை, பொதுமக்கள் நலன் கருதியும், போக்குவரத்துக்கு இடையூறில்லாமல், துரித வாகன போக்குவரத்துக்கு ஏற்பவும், விபத்துக்கள் நடக்கா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் இப்பகுதியில் வசிப்போர், வரும், 17ம் தேதிக்குள், இந்த இடங்களில் சாலையின் இருபுறமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும்; ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.