நெல் விதைப்பண்ணைகளில் அறுவடை தீவிரம்: விதைச்சான்றளிப்பு உதவி இயக்குனர் ஆய்வு
உடுமலை: அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில் அமைக்கப்பட்ட நெல் விதைப்பண்ணைகளில், அறுவடை துவங்கியுள்ளது. அறுவடை செய்யப்பட்ட விதைக்குவியல்கள் விதைச்சான்றுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்குட்பட்ட கல்லாபுரம், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கடத்துார், கணியூர், காரத்தொழுவு பகுதிகளில், 2,500 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது, இப்பகுதிகளில் அறுவடை பணி நடந்து வரும் நிலையில், குறுகிய கால நெல் ரகங்களான கோ-51, ஏ.டி.டி.,37, ஏ.டி.டி.,45, ஏ.எஸ்.டி.,16, ஏ.டி.டி.,36, டி.பி.எஸ்.,5 ஆகிய ரகங்களில், 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், நெல் விதைப்பண்ணைகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது அறுவடைப்பணிகள் நடந்து வருகிறது. இதனை திருப்பூர் மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்புத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: தரமான சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள், அரசு, தனியார் மற்றும் அரசு சார்பு விதை உற்பத்தியாளர்கள், விதைப்பண்ணையாக, விதை சான்றளிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விதைப்பண்ணைகளை கள ஆய்வுக்கு, விதைச்சான்றளிப்பு அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஒதுக்கீடு செய்யப்பட்ட விதைப்பண்ணைகளில், பூப்பருவம் மற்றும் முதிர்ச்சி பருவத்தில் விதைச்சான்றளிப்பு அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பிற ரக கலவன்கள், குறித்தறியப்பட்ட நோய்கள் குறித்து கணக்கீடு மேற்கொள்ளப்படும். வயலாய்வில் தேர்ச்சி பெறும் விதைப்பண்ணைகள் அறுவடைக்கு அனுமதிக்கப்படும். அறுவடை செய்யப்பட்ட நெல் விதைக்குவியல்கள், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஈய வில்லை முத்திரையிடப்பட்டு சுத்தி அறிக்கை வழங்கப்படும். இவ்வாறு, விதைப்பண்ணைகளில் தரமான சான்று பெற்ற விதைக்குவியல்கள் மட்டுமே, அரசு அனுமதி பெற்ற சுத்தி நிலையங்களுக்கு சுத்தி பணிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சுத்திபணி முடிந்த பிறகு, மாதிரி சேகரிக்கப்பட்டு முளைப்புத்திறன், புறத்துாய்மை, பிற ரக கலவன்கள், இனத்துாய்மை ஆகிய இனங்களில் தேர்ச்சி பெறும் விதைக்குவியல்களுக்கு சான்றட்டை பொருத்தப்பட்டு, தரமான சான்று பெற்ற விதைகளாக, விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு, விதைச்சான்றளிப்பு துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.