| ADDED : டிச 07, 2025 05:16 AM
திருப்பூர்: நாற்பது படி ஏறி இறங்குவதற்குள் நம்மில் பலருக்கும் மூச்சு முட்டுகிறது. ஆனால், 14 ஆயிரம் அடி உயரத்தை ஆர்வத்துடன் எட்டி சாதனை படைத்துள்ளார் பவித்ரா. ஹிமாலயன் மவுன்டெயினீரிங் இன்ஸ்டிடியூட் நடத்தும் மலையேறும் பயிற்சியில் திருப்பூர் சிக்கண்ணா அரசுக்கல்லுாரி மாணவி பவித்ரா பங்கேற்றார். அவர் நம்மிடம் பகிர்ந்தவை: பி.எம்.சி., ஏ.எம்.சி., என்று மலையேறுவதற்கான படிப்புகள் இருக்கின்றன. அவற்றை முடித்தால் மட்டும் பனி சூழ்ந்த மலைகளில் ஏறுவதற்கு செல்ல முடியும். பி.எம்.சி.யில் மலையேறி, பயிற்சிகள் முடித்தால் கொடுக்கப்படும் 14 ஆயிரம் அடி உச்சியை ஏறிக்கடந்து 'ஏ' கிரேடு வாங்கியவர் மட்டுமே ஏ.எம்.சி.க்கு தேர்வாவர். நான் பி.எம்.சி.யில் மணாலியில் பயிற்சி செய்து 'ஏ' கிரேடு வாங்கினேன். ஏ.எம்.சி.க்கு தேர்வாகி டார்ஜிலிங் மலையேற அழைப்பு வந்தது. முன்னர் சென்றதை விட சற்று கடினமாகவும் அதே சமயம் அழகான இடமாகவும் இருந்தது. அழகிய அனுபவம் மொத்தம், 26 நாட்கள் நடந்த இப்பயிற்சியில் ஆங்காங்கே மலையேறும்போது 'கேம்ப்' அமைத்து தங்கினோம். சமையல் குழு இருந்தது. தங்குமிடத்தில் அவ்வப்போது சமைத்து உண்டோம். புது அனுபவம் கொடுத்தது. 10 நாள் பயிற்சிக்கு பிறகு சிக்கிம் சென்று மீண்டும் ட்ரெக்கிங் செய்தோம். சில நேரம் நடந்தும், ஓடியும், தவழ்ந்தும் மலை ஏறுவோம். சராசரியாக ஒரு நாளைக்கு 9 கி.மீ. போல நடப்போம். அக்குளிருக்கு சற்று கடினம்தான். ஆனால் அழகான அனுபவம் கிடைத்தது. சிக்கிம் மாநிலத்தில், பனி சூழ்ந்த உயரமான மலைக்கு அழைத்துச் சென்றனர். நவ. மாதம் என்றதால் மிகவும் குளிராக இருந்தது. அங்கு பல மக்கள் இருந்தனர். மலையேற்றப்பயிற்சிக்கு நானும், கோவையில் ஒரு என்.சி.சி. மாணவரும் என்று இருவர் மட்டும் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டோம். அவர்கள் கொடுத்த பயிற்சி, மலையேறும் அனுபவம் என எல்லாமே என் வாழ்வில் நீங்கா இடம் பிடித்தன.