ஒருங்கிணைந்த பூ மார்க்கெட் : வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்
உடுமலை: உடுமலையில், ஒருங்கிணைந்த பூ மார்க்கெட் வளாகம் அமைக்க வேண்டும் என பூ வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடுமலை பூ வியாபாரிகள் சங்க கூட்டம் நேற்று நடந்தது. இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக குமார், செயலாளராக அருள், பொருளாளராக ராமசாமி, துணைத்தலைவர்களாக சரண் பாபு, நாகராஜ், துணைச்செயலாளர்களாக சாதிக், குமரேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக அங்குராஜ், தளி செந்தில், நட்ராஜ் உட்பட, 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில், உடுமலையில் பொதுமக்கள், வியாபாரிகள் பயன்பெறும் வகையில், ஒரே இடத்தில் பூ மார்க்கெட் அமைக்க வேண்டும். பூக்கள் கெடாமல் இருக்க குளிர் பதனகிடங்கு அமைக்கவேண்டும். பூ தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா, மலர் விற்பனை தொழில் வளர்ச்சி அடைய மானியத்தில், அரசு கடன் உதவி வழங்கவேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், உடுமலை சுற்றுப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பூ வியாபாரிகள் பங்கேற்றனர்.