| ADDED : டிச 02, 2025 06:29 AM
உடுமலை: பஸ் ஸ்டாண்டுகளுக்கு இடையே ரோட்டை கடக்க மக்கள் திணறும் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வாக சுரங்கப்பாதை அல்லது நடைமேம்பாலம் கட்ட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட புது பஸ் ஸ்டாண்ட், மே மாதம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல அங்குள்ள ரவுண்டானா பகுதியை மக்கள் கடக்க வேண்டும். அனுஷம் ரோடு, பை-பாஸ் ரோடு மற்றும் ரவுண்டானா வழியாக என மூன்று பிரதான வழித்தடங்களில் இருந்து அதிகளவு வாகனங்கள் வருவதால், ரோட்டை கடக்க மக்கள் பரிதவிக்க வேண்டியுள்ளது. ரவுண்டானாவை ஒட்டி மக்கள் நடந்து செல்ல தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. பல பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டுநர்களும் திடீரென ரோட்டை கடக்கும் மக்களால், தடுமாறுகின்றனர். அப்பகுதியில், போக்குவரத்து போலீசார் காலை, மாலை நேரங்களில் நின்று மக்கள் ரோட்டை கடக்க உதவினாலும், இந்த நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. எவ்வித திட்டங்களும் முழுமையான பலன் தராததால், அனைத்து நேரங்களிலும், பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதியில் நெரிசல் நிலவுகிறது. முதியவர்களும், குழந்தைகளும் ரோட்டை கடக்க முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த, நகராட்சி உள்ளிட்ட அனைத்து துறை ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது. அதில், தேசிய நெடுஞ்சாலையில் காட்சிப்பொருளாக உள்ள நடை மேம்பாலத்தை இடம் மாற்றி வைத்தல், இரு பஸ் ஸ்டாண்டுகளுக்கு இடையே சுரங்க நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பணிகளை மேற்கொண்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என, மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.