'என்னை மறந்துடாதீங்க...' இப்படிக்கு உங்கள் கடிதம்!அன்பு நண்பர்களே! நான்தான் உங்கள் கடிதம். நலம்; நலமறிய ஆவல். தேசிய கடிதம் எழுதும் தினமான இன்று, என் கதையை சொல்கிறேன். கொடுத்த செய்தியை சொல்ல, சாதித்தவரை வாழ்த்த, சோகத்தில் இருப்போருக்கு ஆறுதல் கூற, உதவியவருக்கு நன்றி கூற, 'மணியார்டர்' ஆக குடும்பத்திடம் பணம் கொடுக்க, கேள்வியே கேட்காத போதும் பதில் கடிதமாக பலரிடம் பேச என உணர்வுபூர்வமானது எனது பயணம். புறாவில் பயணத்தை தொடங்கிய நான், பின் தபாலில் பயணித்தேன்; ஸ்பீட் போஸ்ட்டில் உலவினேன்; இன்றும் உலவுகிறேன்... ஆனாலும், பெயரளவுக்கு...! கடிதப்போட்டி திருப்பூர் தபால் அதிகாரிகள் கூறியதைக் கேளுங்கள்: அது ஒரு பொற்காலம்... தபால்காரர் கொண்டு செல்ல முடியாத அளவு பொங்கல் வாழ்த்து கடிதங்கள் இருந்தன. இப்போது அது மறைந்து வருகிறது,மக்கள் மத்தியில் கடிதம் எழுதும் பழக்கம் பெரும்பான்மையாக குறைந்துள்ளது. கடிதத்தின் அருமை புரிந்தவர் சிலரால் ஓரிரு கடிதங்கள், மணியார்டர்கள் வருகின்றன. கடிதம் எழுதுவதை ஊக்குவிக்க பள்ளிகளில் கடிதப்போட்டி நடத்துகிறோம். பெற்றோர், தாத்தா, பாட்டி போன்றோருக்கு இன்லேண்ட் அல்லது தபால் அட்டையில் தீபாவளி, பொங்கல், பெற்றோர் தினம் போன்ற வாழ்த்து கடிதம் எழுதச் சொல்லியிருக்கிறோம். அன்புள்ள அப்பா, அம்மா, மாமா என்று உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துகளை அன்போடும் அனுபவங்களை பகிர்ந்தும் கடிதம் எழுதி தபால் அனுப்பலாம். இப்போதெல்லாம் குறுஞ்செய்தியோடு கடந்துவிடுகிறார்கள். ஆனால் கடிதம்தான் நம் உணர்வுகளைக் கடத்தும். இவ்வாறு, தபால் அதிகாரிகள் கூறினர். அன்பு பரிமாற்றம் நீ அவ்வளவு பெரிய ஆளா; கைபேசி இருக்கிறதே, நாங்கள் ஏன் உன்னை பயன்படுத்த வேண்டும் என்று சிலர் கேட்பது தெரிகிறது. நான் என்ன செய்தியை மட்டுமா கொண்டு செல்கிறேன்; உங்கள் கையெழுத்தில் தோன்றும் மனநிலை, பக்கத்தை நிரப்ப நீங்கள் பொழியும் அன்பு மழை, பழைய நினைவுகள்,அனுபவங்கள், தபால்காரர் வந்ததும் வரும் ஆவலான எதிர்பார்ப்பு என எல்லாவற்றையும் கொண்டு போகிறேனே... இதெல்லாம் நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்தியில் கிடைக்குமா? நேற்று வந்த சமூக வலைதளங்களால், என்னைமறந்துவிட்டீர்கள்! தேர்வுகள், வங்கிகள், அலுவலகங்கள், பள்ளி,கல்லுாரிகள் என்று சில இடங்களில் மட்டும் சம்பிரதாயத்துக்காக எழுதப்படும் என்னை உங்கள் வீட்டில் வாழ்த்து, நன்றி, ஆறுதல் தெரிவிக்கும் ஒரு அன்பை பரிமாறும் கருவியாக மாற்றுவீர்களா! இப்படிக்கு, உங்கள் கடிதம்.: -- இன்று (டிச. 7) தேசிய கடிதம் எழுதும் தினம்.: