உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் அரிசி வாங்கிய நபர் சிக்கியதால் தப்பியோட்டம்

ரேஷன் அரிசி வாங்கிய நபர் சிக்கியதால் தப்பியோட்டம்

திருப்பூர்; தகுதியான கார்டுதாரர்களுக்கு, ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்படுகிறது. பலர் இதனை வாங்குவதில்லை. அதனை சில கடை ஊழியர்கள் வெளிச் சந்தையில் விற்று விடுகின்றனர். பெரும்பாலான கார்டுதாரர்கள், கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்துவது, வட மாநில தொழிலாளர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். ஒரு சிலர் இதனை மாவு அரைக்கும் இயந்திரங்களில் மாவாக மாற்றி, பிளாட்பாரக் கடைகளில் இட்லி, தோசை தயாரிக்க பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் மூட்டை மூட்டையாக வெளி மாநிலங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்வது, அரிசி ஆலைகளுக்கு கொண்டு சென்று பாலீஷ் செய்து, பிராண்டட் அரிசி போல் விற்பனை செய்வது, என பல வகையில் ரேஷன் அரிசியை வைத்து காசு பார்க்கின்றனர். நேற்று போயம்பாளையம் பகுதியில் மொபட்டில் வந்த ஒரு நபர், வீடுவீடாகச் சென்று ரேஷன் அரிசியை விலை கொடுத்து வாங்கி வந்தார். அப்பகுதியில் வசிக்கும் ஒரு சமூக ஆர்வலர் வீட்டிலும் சென்று ரேசன் அரிசியை விலை கொடுத்து வாங்குவதாக கூறியுள்ளார். அந்நபரிடம் இது குறித்து அறிவுரை செய்த சமூக ஆர்வலர், உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறைக்கும் தகவல் அளித்தார். ஆனால், அதிகாரிகள் வர தாமதமானதால், அரிசி வாங்க வந்த நபர், தனது மொபட்டையும், அரிசி மூட்டைகளையும் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். ஒரு மணி நேரத்துக்கு பின் வந்த குடிமைப் பொருள் வழங்கல் துறையினர் அவற்றைக் கைப்பற்றிச் சென்றனர். இதுகுறித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.jayaram
செப் 23, 2025 12:03

என்னசொல்வது, யாரைக் குறைசொல்வது, மக்களையா? அரசையா? அல்லது இதைசெய்து வயிறு வளர்க்கும் கூட்டத்தையா? அனைத்தும் அபத்தம். தேவை என்றால் வாங்கவேண்டும் இல்லை என்றால் விட்டு விடவேண்டும் அப்படி விட்டால் ரேஷன் கடைக்காரர் அதை எடுத்து விட்டுவிடுவார்கள், இது போக ஆளும் கட்சிக்காரர்கள் மாமூல், ரவுடிகளுக்கு தீனி, உண்மையில் இதனால் பயனடைவர் ஒரு ரேஷன் கடையில் 10 சத்தம் மட்டுமே. ஆனால் அதை கண்டு பிடிப்பது தான் சிரமம். சிலர் பார்ப்பதற்கு வசதியானவர்போல தோன்றும் ஆனால் அவர் வீட்டில் ரேஷன் அரிசி சாப்பாடுதான், சிலர் பார்க்க ஒன்றும் இல்லாதவர் போல காட்சியளிப்பார் ஆனால் அவர் வீட்டில் ரேஷன் அரிசி சமைப்பது கிடையாது விற்பனை செய்து விடுவார்கள். இது வாக்கு அரசியல் உள்ளது. யாரும் உத்தமர் இல்லை அனைவரும் இதில் நடக்கும் தவறுகளுக்கு பங்காளிகள் தான், எனவே, மத்திய மாநில அரசுகள் இதை குறைந்த பட்ச விலையில் போட்டால் ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்பதே எங்கருத்து.


புதிய வீடியோ