திருப்பூர்: நிரந்தர முகவரி மாற்றம், இறந்த வாக்காளர் பெயர்களை நீக்கம் செய்ய, அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஏஜன்ட்கள் இருவர் கையொப்பமிட்ட படிவத்தை வழங்கலாம் என, தேர்தல் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும், படிவம் வினியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெறும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடந்த கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்கு, கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்க, இறந்த வாக்காளர் பெயர்களை நீக்க வேண்டும். நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர் பெயரையும் நீக்க வேண்டும். அப்போதுதான், சரியான பட்டியலாக இருக்கும். தகுதியற்ற பெயர் நீக்கம் செய்ய, இது சரியான நேரம். எனவே, அங்கீகரிக்கப்பட்ட கட்சி முகவர்களிடம் வழங்கியுள்ள படிவத்தில், இறந்த, குடிபெயர்ந்த வாக்காளர் பெயர் எழுதி கொடுத்து நீக்கலாம். பெயர் பட்டியலில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை சேர்ந்த, இரண்டு முகவர்கள் கையொப்பமிட்டிருக்க வேண்டும். இதன் மூலம், தகுதியற்ற வாக்காளர் பெயரை நீக்க வசதியாக இருக்கும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம் பெறுவது ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், பட்டியலில் இடம்பெற்றுள்ள, தகுதியற்ற பெயர்களை நீக்கவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும். ஒரு படிவத்தில், வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த இரண்டு முகவர்கள், கையொப்பமிட்டு வழங்கலாம் என்று, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர். வரும், 11ம் தேதி வரை மட்டுமே, வாக்காளர்கள் பூர்த்தி செய்த படிவங்களை வழங்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அதற்குள் படிவங்களை பெற்றுக்கொடுக்கும் பணிகளையும் கட்சி முகவர்கள் மேற்கொண்டு, ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.