நல்லாறு பாதுகாக்க மக்கள் இயக்கம் துவக்கம்: ஆக்கப்பூர்வ நடவடிக்கைக்கு அச்சாரம்
திருப்பூர்: நல்லாற்றை பாதுகாக்க, பொதுமக்கள், தன்னார்வலர்களை உள்ளடக்கி இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது; இதுவரையில்லாத விழிப்புணர்வும், அது தொடர்பான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை மாவட்டம், அன்னுாரில் துவங்கி, அவிநாசி, திருமுருகன்பூண்டி வழியாக திருப்பூர் நொய்யலாற்றில் கலக்கிறது நல்லாறு. ஆரம்ப காலக்கட்டத்தில் நன்னீர் பாய்ந்து, விவசாயம் செழிக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் காரணமாக இருந்த நல்லாறு, காலப்போக்கில் பராமரிப்பு இல்லாமல் போனது; ஓடையை ஒட்டி 'மளமள'வென ஆக்கிரமிப்பு கட்டடங்கள் முளைத்தன. ஓடையை ஒட்டியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நல்லாற்றில் சங்கமித்து, நன்னீரையும் நாசமாக்கியது. நல்லாற்றின் வழித்தடம் பல இடங்களில் புதர்மண்டி, உருக்குலைந்தது. அதிகரிக்கும்விழிப்புணர்வு இதுவரையில்லாத விழிப்புணர்வாக, இந்த ஆற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, நல்லாறு வழித்தடத்தில் உள்ள அவிநாசி, பூண்டி மற்றும் சுற்றுவட்டார மக்கள் உணரத்துவங்கியிருக்கின்றனர். அதன் விளைவாக, 'நல்லாறு பாதுகாப்புக்குழு' என்ற பெயரில் மக்கள் இயக்கம் உருவாகியது. 'குழு துவங்கிய ஒரு வாரத்தில், 450க்கும் மேற்பட்டோர் இணைந்திருக்கின்றனர்' என்கின்றனர் அதன் ஒருங்கிணைப்பாளர்கள்.நல்லாற்றை ஒட்டி, பூண்டி நகராட்சி சார்பில், தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணி நடந்து வருகிறது. இதற்கு, ஆட்சேபனை கிளம்ப, மாவட்ட கலெக்டர் மனிஸ் நாரணவரே நேரில் ஆய்வு மேற்கொண்டு, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க, பூண்டி நகராட்சி மற்றும் வருவாய்த் துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறார். நல்லாறு பாதுகாப்புக்குழுவின் அடுத்த முயற்சியாக, நீர்நிலைகளின் முக்கியத்துவம் குறித்து மக்கள் அறிந்துக் கொள்ளும் வகையில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலர் ராமமூர்த்தி பங்கேற்ற நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டது.நலம் கெட்டு, வளம் குன்றி காணப்படும் நல்லாற்றை மீட்டெடுக்க மக்கள் ஒன்றிணைந்திருப்பது பாராட்டுக்குரியது. அதே நேரம், அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பும். நல்லாறு மீட்டெடுப்பதில் உள்ள நடைமுறை பிரச்னைகள் இதுதான் என்பது தெளிவாகியுள்ள நிலையில், ஆக்கிரமிப்பு கட்டடங்கள் தொடர்பான கோர்ட் வழக்கு முற்றுப்பெறவும், நல்லாறு பராமரிப்புக்கு அரசின் நிதி ஒதுக்கீடு கிடைக்க செய்யவும், நல்லாற்றில் குப்பைக் கொட்டப்படுவதை தவிர்க்கும் வகையில் கரையோராம் வேலி அமைக்க வேண்டும்