உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தொழிற்சாலைகளில் எஸ்.ஐ.ஆர். சிறப்பு முகாம்

 தொழிற்சாலைகளில் எஸ்.ஐ.ஆர். சிறப்பு முகாம்

திருப்பூர்: திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் பல்லடம் ஆகிய மூன்று தொகுதிகளிலும், அதிக எண்ணிக்கையில் தொழிலாளர் பணிபுரியும் தொழில் வளாகங்களில், சிறப்பு முகாம் நடத்தி, தீவிர திருத்த படிவம் பூர்த்தி செய்து பெறும் பணிகளில், மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள், கடந்த நவ. 4ல் துவங்கி நடைபெற்றுவருகின்றன. மொத்தமுள்ள 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர்களுக்கு, தலா இரண்டு வீதம் படிவங்கள் பிரின்ட் எடுக்கப்பட்டு, பி.எல்.ஓ.,க்கள் வாயிலாக, வீடு தேடிச் சென்று வழங்கப்பட்டது. கடந்த 15ம் தேதி முதல், படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுவருகிறது. இப்பணியில், 2,536 பி.எல்.ஓ.,க்கள் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பின்னலாடை தொழிலாளர் அதிகமுள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் தொகுதிகளில் வாக்காளரிடமிருந்து பூர்த்தி செய்த படிவங்கள் வருகை மந்தகதியில் உள்ளது. படிவம் பூர்த்தி செய்து ஒப்படைக்கும் கால அவகாசத்தை, 11ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. கால அவகாசத்தை கச்சிதமாக பயன்படுத்தி, தகுதியுள்ள அனைத்து வாக்காளரிடமிருந்தும் தீவிர திருத்த படிவங்களை பூர்த்தி செய்து பெற, மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் முனைப்புடன் செயல்படுகின்றனர். இது குறித்து ஆலோசிக்க, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து அரசு துறை அலுவலர்கள் மத்தியில், கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசியதாவது: தீவிர திருத்த படிவங்களை பெறுவதற்கு வரும், 11ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. படிவங்களில் உள்ள விவரங்களை சரிபார்க்க வேண்டியிருப்பதால், ஓரிரு நாட்களுக்கு முன்னரே, தகுதியுள்ள அனைத்து வாக்காளரிடமிருந்தும் படிவங்களை பூர்த்தி செய்து பெறும்வகையில், திட்டு செயல்பட வேண்டும். அரசு அலுவலர்கள், தங்களது சுய படிவங்கள் மற்றும் குடும்பத்தினரின் படிவங்களை விரைவாக பூர்த்தி செய்து சமர்ப்பித்து, தங்கள் ஓட்டுரிமையை பார்த்துக்கொள்ள செய்துகொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஒரே வளாகத்தில் அதிக எண்ணிக்கையில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்கும், முதலிபாளையம் 'டெக்கிக்' வளாகம், தாட்கோ வளாகம், புதிய திருப்பூர் நேதாஜி அப்பேரல் பார்க் ஆகிய பகுதிகளில், சிறப்பு முகாம்கள் நடத்தலாம் என, தொழிலாளர் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மதியம், குமார் நகரிலுள்ள ஒரு ஆடை உற்பத்தி நிறுவனத்துக்கு, கலெக்டர் உள்பட தேர்தல் பிரிவினர் சென்று, தொழிலாளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். படிவம் திரும்பப் பெறுதல் 3 தொகுதிகளில் குறைவு ----------- திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளிலுள்ள பெரும்பாலான வாக்காளர்களுக்கு, தீவிர திருத்த கணக்கிட்டு படிவம் பூர்த்தி செய்து வழங்குவது தொடர்பான தகவல்கள் சென்றடையவில்லை. அதனால், அந்த மூன்று தொகுதிகளிலும், படிவங்கள் திரும்ப பெறும் விகிதம் மிக குறைவாக உள்ளது. மூன்று தொகுதிகளிலும், அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகள், தொழில் பூங்காக்களில் முகாம் நடத்தி, தொழிலாளர் மத்தியில் தீவிர திருத்தம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; அவர்களிடமிருந்து படிவங்களை பூர்த்தி செய்து பெறவேண்டும். பள்ளி முதல்வர்கள், மாணவர்கள் வாயிலாக பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்லுாரிகளிலும், தீவிர திருத்த படிவம் பூர்த்தி செய்து வழங்குவது தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மகளிர் குழுவை சேர்ந்தவர்கள் ஒரு லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும், தலா மூன்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கச் செய்தாலே, மூன்று லட்சம் படிவங்கள் வரப்பெற்றுவிடும். மாநகர, மாவட்ட போலீசார் வசதிக்காக சிறப்பு முகாம்கள் நடத்தவும் தயாராக உள்ளோம். - மனிஷ் நாரணவரே, கலெக்டர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை