திருப்பூர்: 'பி.எம்., - மித்ரா பூங்காவில், தொழிற்பூங்காவில், செயற்கை நுாலிழை உற்பத்தி மையம் துவக்க, 50 சதவீத மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆயத்த ஆடை பூங்கா ( பி.எம்., - மித்ரா பூங்கா) திட்டத்தில், தமிழகம், குஜராத், கர்நாடகா, மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில், பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. 'பிளக் அண்ட் பிளே' வசதி தமிழகத்தில் மட்டும், 1,894 கோடி ரூபாயில், விருதுநகர் மாவட்டத்தில் 'பி.எம்., - மித்ரா' பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்தின், தொழில் தன்மைக்கு ஏற்ப தொழிற்சாலைகள் அமைய உள்ளன. தொழில்துறையினர், 'பிளக் அண்ட் பிளே' என்ற வகையில், உற்பத்தியை உடனடியாக துவக்கும் வசதிகளுடன், தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு வருகின்றன. சிறப்பு ஊக்கத்தொகை பூங்கா பணி வேகமாக நடந்து வரும் நிலையில், 'பி.எம்., - மித்ரா 'தொழிற்பூங்காவில், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி மையங்களை துவக்க, சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. சீனா, வங்கதேசம், வியட்நாம், கம்போடியா போன்ற போட்டி நாடுகளுடன் ஒப்பிடுகையில், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் இந்தியா பின்தங்கி இருக்கிறது. சர்வதேச சந்தை வாய்ப்புகளை பெற வாய்ப்பாக, இந்திய ஏற்றுமதியாளர்களும் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 50 சதவீத மானியம் 'பி.எம்., - மித்ரா' தொழிற்பூங்காவில், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி மையங்களை அமைக்க முன்வரும் தொழில்முனைவோர் மற்றும் தொழில்துறையினருக்கு, 50 சதவீத மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என, ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட பின்னலாடை தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர். அதிகாரிகள் உறுதி: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் அறிக்கை: அமெரிக்க வரி உயர்வால், ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அமெரிக்க ஏற்றுமதிக்கு, 15 சதவீத ஊக்கத்தொகை வழங்க வேண்டுமென, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை வர்த்தகத்தின் எதிர்கால நலன்கருதி, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியிலும் கவனம் செலுத்த வேண்டும். 'பி.எம்., - மித்ரா' தொழிற்பூங்காவில் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி மையம் துவக்க, 50 சதவீத மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. 'தொடர்புடைய அரசுத்துறை அதிகாரிகளுடன் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பதில் அளித்துள்ளனர்.