| ADDED : டிச 07, 2025 06:57 AM
சீ னர்கள் காகிதம் கண்டுபிடித்த பிறகுதான் எழுதும் பழக்கம் அதிகரித்தது. சில விஷயங்கள் மறக்காமல் இருக்க எழுதப்படும். புகைப்படம் அல்லது எழுத்து வாயிலாக மட்டுமே வரலாற்றை பதிவு செய்ய முடியும். மனப்பாடம் செய்வதும், வாயில் சொல்வதும் பெரிதாக பலனளிக்காது. 54 ஆண்டுகள் ஸ்டேஷனரி துறையில் சிறந்து விளங்கும் திருப்பூரை சேர்ந்த டி.நாகசுப்ரமணியன் நம்முடன் பகிர்ந்தவை: அனுபவத்தில் சொல்கிறேன்; ஒரு முறை எழுதுவது பத்து முறை படிப்பதற்கு சமம். எப்போதும் எழுத்து வடிவில் பதிவு செய்வது நல்லது. நாம் போன் பயன்படுத்து கிறோம். சேமித்தது மனதில் இருந்தால் எடுத்துவிடலாம்; இல்லை என்றால் சிரமமே. நம் பழைய நினைவுகள் மற்றும் குறிப்புகளை குறித்து வைக்க வேண்டும். டைரிக்கு பேப்பர் தான் அவசியம். டன் 2 ஆயிரம் ரூபாய் இருந்தது. இப்போது, 80 ஆயிரம் ரூபாய் ஆகிவிட்டது. அக்காலத்தில் ரூபாய் ஐந்து, பத்துக்கு டைரி விற்கப்பட்டது. இருபது, முப்பதுக்கு விற்கப்படுபவை விலையுயர்ந்ததாக கருதப்பட்டது. இன்று ரூபாய் 10 முதல் 1200 வரையிலும் விற்கப்படுகிறது. சிறப்பு நாட்கள், சனி, ஞாயிறு, வார, மாத சிறப்பு பார்வை என்று 300க்கும் மேற்பட்ட டைரி வகை இருக்கிறது. பழைய டைரிகள் குறைவான விலையில் விற்கப்படும். வாயில் சொன்னால் வாய்ப்பேச்சாக போய்விடும். மனப்பாடம் செய்தால் மறந்து விடும். டைரியில் எழுதி வைத்தால் மட்டும் சரி வரும். அனைவரும் டைரி எழுதுங்கள். போன் நம்பர், தேதிகள், குறிப்புகள் போன்ற தேவைப்படுவன எழுதுங்கள். பிறகு ஒரு நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள், நாளுக்கு நாள் என்ன செய்கிறோம், என்று எழுதுங்கள். இதனால் நமக்கு பின் உள்ள தலைமுறையினரும் அறிந்துகொள்வர்.