உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பாசன நாள் குறைப்பதா?; விவசாயிகள் கொந்தளிப்பு

 பாசன நாள் குறைப்பதா?; விவசாயிகள் கொந்தளிப்பு

பொங்கலுார்: பி.ஏ.பி. வாய்க்கால் வாயிலாக, 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது. தண்ணீர் இருப்பை பொருத்து இரண்டு முதல் ஐந்து சுற்று வரை தண்ணீர் விடப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு தண்ணீர் விட அரசாணை பெறப்படுகிறது. வாய்க்கால் பராமரிப்பு, உடைப்பு, நிர்வாக கோளாறு, பராமரிப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசாணை பெற்ற நாட்களுக்குள் தண்ணீர் வழங்க தாமதம் ஆகிறது. மேலும், ஒரு அரசாணை பெறுவதை தவிர்த்து விட்டு தண்ணீர் விடும் நாட்களை ஒவ்வொரு ஆண்டும் பொதுப்பணித்துறை குறைத்து விடுகிறது. இது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பதில்லை. தற்போது நான்காம் மண்டல பாசனம் நடக்கிறது. சமீபத்தில், பல்லடம் அருகே வாவிபாளையத்தில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பை சரி செய்ய தண்ணீர் நிறுத்தப்பட்டது. அரசாணை பெறப்பட்ட நாட்களுக்குள் தண்ணீர் வழங்க முடியாது என்பதால் பாசன நாட்களை பொதுப்பணித்துறையினர் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. அணைகளில் அதிக அளவில் தண்ணீர் இருப்பு இருந்த போதிலும் பாசன நாட்களை குறைப்பது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பி.ஏ.பி. நிர்வாகத்தின் இந்த செயலுக்கு எதிராக விவசாய சங்கங்கள் பொங்கி எழுந்துள்ளன. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்த விவசாயிகளை திரட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று காலை பொள்ளாச்சி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை