திருவண்ணாமலை: ''தி.மு.க., ஆன்மிகத்திற்கு எதிரான அரசாக உள்ளது,'' என, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்'' என்ற சுற்றுப்பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ள அவர், நேற்றிரவு திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:தி.மு.க., அரசு அறிவித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், பொய்யாக்கி வருகிறது. வாழை, கரும்பு விவசாயிகளுக்கும் தானியக்கிடங்கு அமைப்போம், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவோம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, 25 சதவீதம் மானியம் தருவதாக என அறிவித்து அதுவும் செய்யவில்லை. நீதிமன்றம் தெரிவித்தும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியவில்லை. ஆன்மிகத்திற்கு எதிரான அரசாக, தி.மு.க., அரசு உள்ளது. மத்திய அரசு எதை கொடுத்தாலும், அதில் தன் ஸ்டிக்கர் மட்டுமே, தி.மு.க., அரசு ஒட்டி, விளம்பரபடுத்தி கொள்கிறது.எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்வதுதான், தி.மு.க., அரசின் வேலையாக உள்ளது. ஜி.எஸ்.டி., நீட் தேர்வு என்று எதற்கெடுத்தாலும் உச்ச நீதிமன்றம் செல்லும், தி.மு.க., அரசு, உச்ச நீதிமன்றம், தி.மு.க.., அரசிற்கு சரியான தீர்ப்பு வழங்குவது போல், 2026ல் தமிழக மக்கள், தி.மு.க.,விற்கு சரியான தீர்ப்பு வழங்க வேண்டும். தமிழக அமைச்சர்கள், 17 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளன. மோடி ஆட்சி, இதுவரை எந்த ஊழலும் இல்லாத நல்லாட்சியாக உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.பா.ஜ., மாநில பொதுச்செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், கார்த்தியாயினி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.