த மிழகம் முழுதும், மாவட்ட தலைவர்களை நியமித்து, புதிய கட்டமைப்பை ஏற்படுத்தும் பணியில் காங்கிரஸ் தீவிரம் காட்டியுள்ளது. தமிழகத்தில் 38 மாவட்டங்களுக்கு, தலா ஒரு மேலிட பார்வையாளர் மூலம், கட்சி ரீதியிலான 78 மாவட்டங்களில், மாவட்ட தலைவர்களை நியமிப்பது தொடர்பாக கருத்து கேட்டு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவரை பார்வையாளராக நியமித்து, விழுப்புரம் மத்திய மாவட்டம், வடக்கு மாவட்டத்தில் புதிய தலைவர்களை நியமிப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டங்கள் நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களாக தொகுதி மற்றும் வட்டாரங்கள் வாயிலாக கருத்துக்கள் கேட்கப்பட்டு ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். விழுப்புரம், திருக்கோவிலுார், வானுார் தொகுதிகளைக் கொண்ட மத்திய மாவட்டத்தில், சீனிவாசகுமாரும், திண்டிவனம், மயிலம், செஞ்சி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு உட்பட்ட வடக்கு மாவட்டத்தில் ரமேஷ் தலைவராகவும் செயல்பட்டு வருகின்றனர்.கட்சி தலைமை முடிவின்படி, தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கும் மேல் தலைவராகவும், கோஷ்டி தலைவர்களின் பரிந்துரையால் தலைவராக இருப்பவர்களை மாற்றி, கட்சி வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும் செல்வாக்கு மிக்கவர்களை நியமிக்க வேண்டும் என, மாவட்ட தலைவர் நியமனங்களுக்கான கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதனடிப்படையில், விழுப்புரம் மத்திய மற்றும் வடக்கு மாவட்டத்தில் மேலிட பார்வையாளர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார். மத்திய மாவட்டத்தில், மீண்டும் சீனிவாசகுமார், தொகுதி பொறுப்பாளர் வாசிம்ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா, கவுன்சிலர் சுரேஷ்ராம் உள்ளிட்ட 13 பேர் தலைவர் பதவிக்கு விருப்ப மனு கொடுத்துள்ளனர். வடக்கு மாவட்டத்தில், தற்போதைய தலைவர் ரமேஷ், மாநில துணைத் தலைவர் ரங்கபூபதி, இளைஞர் காங்., பொறுப்பாளர் தினகர் உள்ளிட்ட 8 பேர் விருப்பம் மனு கொடுத்துள்ளனர். கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் கோஷ்டி தலைவர்களின் பரிந்துரையின் படியே, நீண்ட காலமாக தலைவர்கள் பொறுப்பில் உள்ளனர். இதனால், தொண்டர்கள் கரைந்து, பதவியில் உள்ள நிர்வாகிகள் தான் எஞ்சியுள்ளனர். கடந்த கால தேர்தலின் போது, விழுப்புரம் மாவட்டத்தில், காங்., கட்சிக்கு வெற்றி வாய்ப்பை கருதி, கூட்டணியிடம் தொகுதிகளை கேட்டுப் போட்டியிடும் அளவிற்கு கட்சி செல்வாக்கு பெற்றிருந்தது. ஆனால், தற்போது தங்களது வியாபார வளர்ச்சிக்கும், தனிப்பட்ட பணிகளுக்கு மட்டுமே சிலர் கட்சி பொறுப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். கூட்டணி கட்சியாக தி.மு.க., இருப்பதால், அவர்களுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு, கட்சி வளர்ச்சிக்கு எவ்வித பணிகளும் மேற்கொள்வதில்லை. இது அனைவருக்கும் தெரியும். நீண்டகாலமாக போதிய கட்சி நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடைபெறாமல் உள்ளதும் இதற்கு உதாரணம். எவ்வித கூட்டங்களுக்கும், நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. தற்போது நடக்கும் கருத்து கேட்பு கூட்டங்களுக்கே பலருக்கு தகவல் சொல்லவில்லை. கட்சி தலைமை, தற்போது செல்வாக்கு மிக்க தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும், கோஷ்டி தலைவர்களின் பரிந்துரை இல்லாத நபராக வளர்ச்சியை கவனிப்பவர்களாக, இளைஞர்களை, மகளிரை தேர்வு செய்ய அறிவுறுத்தியுள்ளது.ஆனால், மீண்டும் தற்போதுள்ளவர்களே பதவியைப் பெற மறைமுகமாக தீர்மானம் போடச்சொல்லி தங்கள் பெயரை முன்மொழிய சொல்லியுள்ளனர். இதனால், கட்சி நலிந்து, பழைய நிலைமைக்குத்தான் செல்லும். சில நிர்வாகிகள், தாராளமாக செலவு செய்வதன் காரணமாக முக்கிய பொறுப்புகளை வாங்கிக்கொண்டு செயல்பட்டதால், பழைய நிர்வாகிகள் பலர் ஒதுங்கிக்கொண்டு, கட்சி வளர்ச்சிப் பணியையும் கைவிட்டனர். இவற்றையெல்லாம் ஆய்வு செய்து, உண்மையாக கட்சியை வளர்க்கும் ஆர்வமுள்ள, செல்வாக்குள்ள நபர்களை தலைவராக நியமிக்க வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் தரப்பில் தெரிவித்தனர்.