உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  இ-பைலிங் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்

 இ-பைலிங் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், நீதிமன்றங்களில் இ பைலிங் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில், வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்பிக்கும் இ-பைலிங் என்ற டிஜிட்டல் நடைமுறை திட்டம் வரும் 1ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கு, வழக்கறிஞர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பினர், இ-பைலிங் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று ஒருநாள் வேலை நிறுத்தம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் எதிரே நடந்த போராட்டத்திற்கு, வழக்கறிஞர் சங்க தலைவர்கள் சகாதேவன், ராதாகிருஷ்ணன், ராஜகுரு, பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில், 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 10:40 மணிக்கு பிறகு 10 நிமிடம் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால், திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. போராட்டம் குறித்து வழக்கறிஞர் சங்கத்தினர் கூறுகையில், 'தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், வரும் 1ம் தேதி முதல் இ-பைலிங் நடைமுறையை கட்டாயமாக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு வழக்கிற்கான அனைத்து ஆவணங்களையும், வழக்கறிஞர்கள், தங்களது நீதிமன்றங்களில் இணையவழியில் பதிவேற்றம் செய்யும் பணி தாமதமாகும். நீதிமன்றங்களில் போதிய அதிவேக இணைய வசதியும், கம்ப்யூட்டர், மின்னணு சாதன வசதிகளும் இல்லாத நிலையில், வழக்கிற்கான நடைமுறை பணிகள் தாமதமாகும். அதற்கான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தும் வரை, இந்த அறிவிப்பை, சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து, இ-பைலிங் முறையை கட்டாயப்படுத்தாமல், தற்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

lana
நவ 29, 2025 12:36

நாட்டில் படிக்காதவர்கள் கூட டெக்னாலஜி முன்னேற்றத்திற்கு ஆதரவாக இருப்பார்கள். அதுக்கு எதிரா இருக்கும் ஒரே இடம் நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர் கள். இன்னும் உளுத்து போன பழைய சட்டம் பழைய நடைமுறை வாய்தா. பேசாமல் வெளிநாட்டினார் இங்கு வந்து தொழில் செய்ய வழக்கறிஞர் களுக்கு அனுமதி வழங்க வேண்டும்


KR india
நவ 29, 2025 10:11

ஒரே ஒரு கம்ப்யூட்டர் அல்லது மடிக்கணினி மற்றும் ஒரு ஸ்கேனர் மற்றும் பிரிண்டர் கண்டிப்பாக ஒவ்வொரு வழக்கறிஞரும் தங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சொந்தமாக வைத்திருக்க வேண்டும். அதை பயன்படுத்துவது எப்படி என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இதற்காக, ஒவ்வொரு முறையும், கோர்ட்-ல் பணிபுரியும் அலுவலர்களின் உதவியை எதிர்பார்ப்பதோ , அல்லது அதற்குண்டான Infrastructure வசதியை கோர்ட் வளாகத்தில், அமைத்து தரவேண்டும் என்று அரசாங்கத்தை எதிர்பார்த்து, E-Filing முறையை, தள்ளிப்போட சொல்லி, காலதாமதம் செய்ய சொல்வதோ, ஏற்புடையதல்ல. இ-பைலிங் திட்டம் மிக மிக அருமையான திட்டமாகும். ஏற்கனவே, திட்டமிட்டபடி, அது உடனடியாக, நாடு முழுவதும், செயல்பாட்டிற்கு வருவது தான் சரியாகும். கம்ப்யூட்டர் இயக்க தயங்கும் வழக்கறிஞர்கள், அதை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். முதலில், கணினியில், வேகமாக டைப் செய்ய வராதது உண்மைதான். ஆனால், பழக, பழக கம்ப்யூட்டர் இயக்குவது எளிதாகி விடும்.


மேலும் செய்திகள்