வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: விழிப்புணர்வு ஊர்வலம்
விழுப்புரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் விழுப்புரத்தில் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, கொடியசைத்து துவக்கி கூறியதாவது: மாவட்டத்தை பொருத்தவரை 17 லட்சத்து 27 ஆயிரத்து 490 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 87 சதவீதம் வாக்காளர்களுக்கு சிறப்பு தீவிர திருத்த பணிக்கான கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 சதவீதம் வாக்காளர்கள் தங்களது வீடுகளில் இல்லாமல் இருந்து இருக்கலாம். இருந்தாலும், ஓட்டுச்சாடி நிலை அலுவலர்கள் மூன்று முறை வாக்காளர்கள் வீட்டிற்கு சென்று நேரில் பார்க்க வே ண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர் என 1,970 அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் தொடர்பாக பல விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, 2002 வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களின் தாய், தந்தை பெயர், பாகம் எண் ஆகிய விபரங்களை இணையதளத்தில் எளிமையாக பார்ப்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் வாக்காளர் சேவை மையத்தின் இலவச எண் 1950 எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் கூறினார். உதவி கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஸ்வரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) செந்தில்வடிவு உட்பட பலர் பங்கேற்றனர்.