உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

சிவகாசி: கண்மாய் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு, துார் வாராத வரத்துக் கால்வாய் என செங்கமலப்பட்டி புதுக் கண்மாய் பரிதாபத்தில் உள்ளது.சிவகாசி அருகே செங்கமலப்பட்டி புதுக் கண்மாய் 80 ஏக்கர் பரப்பளவு, 100 ஏக்கர் பாசன வசதி உடையது. இக்கண்மாயை நம்பி இப்பகுதி விவசாயிகள் நெல், மக்காச்சோளம், கத்தரி, தக்காளி, பாகற்காய், வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடுகின்றனர். மேலும் கண்மாய் நீரை ஆதாரமாகக் கொண்டு கிணற்று பாசனத்திலும் விவசாயம் நடக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கண்மாய் மேலோட்டமாக துார்வாரப்பட்டது.தற்போது கண்மாய் முழுவதுமே சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. மேலும் கரையும் பலவீனம் அடைந்துள்ளது. கண்மாய்க்கு மழைக் காலங்களில் தண்ணீர் வருகின்ற வரத்துக் கால்வாயும் புதர்களால் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் மழை பெய்தாலும் தண்ணீர் ஓடி வர வழியில்லை. கண்மாயில் இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் கண்மாய்க்கு தண்ணீர் வந்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்

கோபால்சாமி, விவசாயி: புதுக் கண்மாய்க்கு வரத்து கால்வாய் தவிர பள்ளப்பட்டி கடம்பன்குளம், திருத்தங்கல் உறுஞ்சிகுளம் கண்மாயிலிருந்து தண்ணீர் வரும். அந்தக் கண்மாய்கள் கழிவுநீராக மாறிய நிலையில் புது கண்மாய்க்கும் கழிவு நீரே வருகின்றது. இந்தத் தண்ணீரை விவசாய நிலங்களுக்கு பாய்ச்ச முடியவில்லை. எனவே புதுக் கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

துார்வாருவது அவசியம்

கண்ணன், விவசாயி: வரத்துக் கால்வாய் புதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் வராமல் கண்மாய் வறண்டு காணப்படுகிறது. மேலும் கண்மாய் ஒரே சீராக இல்லாமல் ஆங்காங்கே பள்ளம், மேடாக உள்ளதால் பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. எனவே கண்மாயை முழுமையாக துார்வார வேண்டும்.

தேக்குவதற்கு வழியில்லை

செல்வம், விவசாயி: கண்மாய் மட்டுமல்லாது கரைகளிலும் சீமைக் கருவேல மரங்கள் நிறைந்துள்ளது. தவிர தேவையற்ற செடிகளும் அதிக அளவில் வளர்ந்துள்ளது.இதனால் தண்ணீரை தேக்குவதற்கு வழி இல்லை. கண்மாய்க்கு தண்ணீர் வந்தால் மகிழ்ச்சி ஏற்படுவதற்கு பதிலாக கழிவுநீராக மாறிவிட்டதால் வருத்தமே ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி