| ADDED : டிச 07, 2025 08:40 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள ஊருணிகள் கழிவுநீரால் பாசி படர்வது அதிகரித்து வருவதால் தற்போது பெய்துள்ள பருவமழையால் நீர்வரத்து ஏற்பட்டும் பயனில்லாத சூழல் உள்ளது. மாவட்டத்தில் 450 ஊராட்சிகள் உள்ளன. இதில் 500க்கும் மேற்பட்ட ஊருணிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வறண்டு, மேடாகி விட்டன. சில ஊருணிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டு விட்டன. எஞ்சியுள்ள ஊரின் மையப்பகுதிகளில் அமைந்துள்ள சில ஊருணிகள் மட்டும் நீர் தேக்கத்திற்கு ஏதுவாக உள்ளன. அவையும் சுற்றியுள்ள குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் மாசடைந்து வருகின்றன. மெட்டுக்குண்டு, செங்குன்றாபுரம் ஊருணிகள் இது போன்ற சிக்கல்களில் உள்ளன. இதே போல் செங்கோட்டை, மீசலுார் அழகாபுரி ஊருணிகள் அதிகளவில் பாசி படர்ந்து காணப் படுகின்றன. இவ்வகை பாசிகள் நீரை விரைவில் ஆவியாக்குவதுடன், நிலத்தடி நீர்மட்டத்தை குறைப்பவை. இவற்றை சீரமைக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. இதனால் நல்ல மழை பெய்தும் மழைநீரானது பாசி படர்ந்த ஊருணியிலே சேர்ந்துள்ளது. இதனால் இந்த நீர் விரைவில் ஆவியாவதுடன், பயன்பாட்டுக்கும் உதவாமால், நிலத்தடி நீராகவும் பயன்படாமல் போக வாய்ப்புள்ளது. மழை முடிந்ததும் ஊருணிகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.