| ADDED : நவ 14, 2025 03:56 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் பஸ் ஸ்டாண்டில் இருந்து வடக்கு ரத வீதி வரையிலும், சின்ன கடை பஜாரில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரையிலும் இருந்த நடைபாதை ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் நேற்று அகற்றியது. ஸ்ரீவில்லிபுத்துாரில் பஸ் ஸ்டாண்ட் ,அதன் சுற்றுவட்டார பஜார் பகுதிகளிலும், வடக்கு ரத வீதியிலும் கழிவுநீர் வாறுகால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மழை நேரத்தில் ரோட்டிலும், பஸ் ஸ்டாண்டிலும் கழிவு நீர் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வந்தது. மேலும் ஆக்கிரமிப்பினால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பஸ், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் எளிதில் வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அகற்ற மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா உத்தரவிட்டார். இதன்படி நேற்று சின்ன கடை பஜாரில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரையிலும், வடக்கு ரத வீதியில் இருந்து நகைக்கடை பஜார் வழியாக கான்வென்ட் பள்ளி வரையிலும் இருந்த நடைபாதை ஆக்கிரமிப்புகளை நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர். நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், நகராட்சிக்கு சொந்தமான ரோடுகளில் வாறுகால்களை தாண்டி ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. நகராட்சி அனுமதி பெற்ற நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் முடிந்த பின்பு தங்களது வண்டிகளை எடுத்துச் செல்ல வேண்டும். நிரந்தரமாக நிறுத்தக்கூடாது. மீறுபவர்கள் மீது தமிழ்நாடு நகராட்சி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் தேசிய, மாநில நெடுஞ்சாலை, நகராட்சிக்கு சொந்தமான அனைத்து ரோடுகளிலும் முழு அளவில் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க் கின்றனர்.