உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  தேவதானம் கோயில் காவலாளிகள் கொலையில் மற்றொருவரை தேடி வரும் தனிப்படையினர்

 தேவதானம் கோயில் காவலாளிகள் கொலையில் மற்றொருவரை தேடி வரும் தனிப்படையினர்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் நடந்த காவலாளிகள் பேச்சி முத்து 50, சங்கர பாண்டியன் 65, கொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொருவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் இரவு நேர காவலாளிகள் இருவர் நவ.10 இரவு பணியில் இருந்த போது வெட்டி கொலை செய்யப்பட்டனர். கோயிலில் இருந்த சி.சி.டி.வி கேமராக்கள், கேமரா பதிவு டி.வி.ஆர் சேதப்படுத்தப்பட்டு கோயில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் கோயில் பின்புற மதில் சுவர் வழியே இறங்கிய குற்றவாளிகள் சி.சி.டி.வி கேமராக்களை சேதப்படுத்திய நிலையில் கருவறை அருகில் கேமரா இருந்தது தெரியவில்லை. இதன் அடிப்படையில் நேற்று முன் தினம் அதிகாலை தேவதானத்தை சேர்த்த நாகராஜ் 25, என்பவரை காலில் சுட்டுப் பிடித்தனர். இவரது தகவல் அடிப்படையில் முனியசாமி 40, என்பவரை தேடி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில்: சம்பவத்தில் சந்தேகப்படும் 10க்கும் மேற்பட்ட நபர்களை கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தோம். இதில் நாகராஜ், முனியசாமி மக்களோடு மக்களாக இருந்த நிலையில் இருவரின் அலைபேசியும் அணைக் கப்பட்டு இருந்ததுடன் கோயில் கருவறை அருகே கேமராவில் பதிவான உருவம் ஒத்துப் போனது. கொலையான அன்று காவலாளிகளின் உடல் கொண்டு செல்லும் வரை உடன் இருந்தவர்கள் மோப்பநாய் வருவது தெரிந்து பயத்தில் தலைமறைவாகினர். இதில் அவர்கள் மேல் எங்கள் சந்தேகம் வலுத்தது. ரகசிய தகவலின் படி நேற்று முன் தினம் அதிகாலை 2:00 மணியளவில் அசையாமணி அருகே தோப்பில் பதுங்கி இருந்த நாகராஜை தனிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். கோயிலில் கொள்ளை அடித்த விளக்கு, ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை மீட்க பதுக்கி வைத்திருந்த கல்லணை அருகே அழைத்து சென்றபோது எஸ்.ஐ., கோட்டையப்ப சாமியை அரிவாளால் வெட்டி தப்ப முயன்றதால் காலில் சுட்டு பிடித்தோம். இந்நிலையில், இவருடன் சம்பவத்தில் ஈடுபட்ட முனியசாமி அவரது மாமியார் வீடான வத்திராயிருப்பு அருகே கோட்டையூரில் பதுங்கி இருப்பதை அறிந்து அங்கு விரைந்த போது அவர் தப்பி சென்று விட்டார். இதனையடுத்து மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் ட்ரோன் மூலம் தேடுகிறோம் என்றனர். முனியசாமி மாவட்டத்திலுள்ள அனைத்து கோர்ட்டுகளில் சரணடையலாம் என்ற தகவலை ஒட்டி போலீசார் முகாமிட்டு கண்காணித்த நிலையில் நேற்று மாலை வரை வரவில்லை. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இன்றும் கண்காணிப்பு தொடரும் என தகவல் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி