| ADDED : டிச 02, 2025 06:12 AM
மதுரை: மது அருந்துவதால் ஏற்படும் சாலை விபத்துக்களில் ஆண்டுக்கு 2 லட்சத்து 98 ஆயிரம் பேர் இறக்கின்றனர். இவர்களில் 1 லட்சத்து 56 ஆயிரம் பேர் மது அருந்தாத அப்பாவிகள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாக அறிவுறுத்திய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடையை மூட போராடியவர்களுக்கு எதிராக பதிவான வழக்கை ரத்து செய்தது. ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அருகே நாடார்வலசையிலுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி, பாதையை மறித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பக்ருதீன் உள்ளிட்ட சிலர் மீது தேவிபட்டினம் போலீசார் வழக்கு பதிந்தனர். இதை ரத்து செயயக்கோரி பக்ருதீன், செல்வி உள்ளிட்ட 10 பேர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் யாசர் அராபத்: குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் அமைந்துள்ளது. மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மனுதாரர்கள் ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மது அல்லது வேறு எந்த போதை தரும் பானங்களையும் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மருத்துவ நோக்கங்களுக்கானதைத் தவிர, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதை தரும் பானங்களை உட்கொள்வதை தடை செய்ய மாநில அரசை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. நாட்டிலேயே முதன்முதலில் மதுவிலக்கை அமல்படுத்தியது தமிழக அரசுதான். 1937 ல் தமிழகத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டு 1971 வரை தொடர்ந்தது. சட்டவிரோத சாராயத்தால் ஏற்படும் மரணங்களைத் தடுக்கும் நோக்கில் டாஸ்மாக் 1983ல் துவக்கப்பட்டது. இது பாராட்டத்தக்க நோக்கத்துடன் நிறுவப்பட்டாலும், அரசுக்கு வருவாய் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது. மனிதர்களின் ஆரோக்கியத்தில் மதுவின் பிற விளைவுகளை பொருட்படுத்தாமல் அரசால் ஆதரிக்கப்படுகிறது. சட்டவிரோத சாராயத்தால் ஏற்படும் மரணங்களை தடுக்கும் நோக்கில் இந்நிறுவனம் துவக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமீபத்தில் சட்டவிரோத சாராயத்தை உட்கொண்டதால் 66 பேர் இறந்தனர். மது அருந்துவதால் உடலுறுப்புகள் பாதிக்கிறது. இதனால் அதிக மருத்துவச் செலவுகள் ஏற்படுகின்றன. இது மது அருந்துபவர்களின் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தினர், மற்றவர்களின் ஆரோக்கியத்திலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மது குரூப் 1 வகை புற்றுநோயை உண்டாக்கும் ஊக்கியாக உள்ளதாக சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மது அருந்துவதால் ஏற்படும் சாலை விபத்துக்களால் ஆண்டுக்கு 2 லட்சத்து 98 ஆயிரம் பேர் இறக்கின்றனர். இவர்களில் 1 லட்சத்து 56 ஆயிரம் பேர் மது அருந்தாத அப்பாவிகள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2019ல் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் 3322 மரணங்கள், 7845 பேர் காயமடைந்தனர். இது 2021 ல் அதிகரித்து 4201 மரணம், 8809 பேர் காயமடைந்ததாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடிப்பழக்கத்தால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. இந்தியாவில் 32 சதவீதம், தமிழகத்தில் 40 சதவீத பெண்கள் கணவர்களிடமிருந்து குடும்ப வன்முறையை எதிர்கொள்கின்றனர். இந்தியாவில் 2021 ல் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 தற்கொலைகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. 6.4 சதவீத தற்கொலைகளுக்கு போதைப்பொருள் / மது போதை காரணம். இந்தியாவில் 5.7 கோடிக்கும் அதிகமான மக்கள் தீங்கு விளைவிக்கும் அல்லது மது பயன்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வது அரசின் கடமை என இந்திய அரசியலமைப்பு வலியுறுத்துகிறது. மது அருந்துவதால் 26 லட்சம் பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் 2019 ல் தெரிவித்துள்ளது. வழிபாட்டுத் தலங்கள் அல்லது கல்வி நிறுவனங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடையை நிறுவக்கூடாது என அரசின் விதி கூறுகிறது. மற்றவர்கள் மது அருந்துவதால் பாதிக்கப்படும் மனுதாரர்களுக்கு, தங்கள் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடை குறித்து அரசிடம் கேள்வி கேட்க உரிமை உண்டு. மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் அரசின் எந்தவொரு கொள்கை முடிவும் மக்களால் கேள்விக்குள்ளாக்கப்படும். அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்க அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு. அதை குற்றம் என கூற முடியாது. மனுதாரர்களுக்கு எதிராக பதிவான வழக்கு அடிப்படையில் நடவடிக்கைகளைத் தொடர அனுமதிப்பது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும். வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.