தமிழக வாக்காளர் பட்டியலில் 50 லட்சம் பேர் நீக்கம்?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பெயர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்பணி முறையாகவும், சரியாகவும் நடந்தால், நீக்கப்படும் வாக்காளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறந்தவர்கள், வீடு மாறியவர்கள் போன்றோரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் பல ஆண்டுகளாக நீக்கப்படாமல் உள்ளன. பெரும்பாலான வாக்காளர்களின் பெயர், ஒன்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் இடம் பெற்றுள்ளது; இது ஓட்டுப்பதிவு சதவீதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதேநேரம், உண்மையான வாக்காளர்கள் பலரின் பெயர் இடம் பெறாமல் உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ள வாக்காளர்களைக் கண்டறிந்து, அவர்கள் விரும்பும் இடம் தவிர, மற்ற இடங்களில் அவர்களின் பெயரை நீக்கும் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. அத்துடன், பீஹார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டதுபோல், வாக்காளர் அல்லாதோரை நீக்கம் செய்வதற்காக, எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்கா ளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் அறிவித்தது. கடந்த நவ., 4 முதல் நேற்று வரை, இதற்கான கணக்கெடுப்பு படிவங்கள் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டன. வாக்காளர்கள் அவற்றை பூர்த்தி செய்து வழங்க அறிவுறுத்தப்பட்டது. தற்போது, இப் பணிக்கான கால அவகாசம், வரும் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மாநிலம் முழுதும், இறந்தவர்கள் 23 லட்சத்து, 83,775 பேர்; நிரந்தரமாக இடம் மாறி சென்றவர்கள், 27 லட்சத்து, 1,050 பேர்; கண்டு பிடிக்க முடியாதவர்கள், 5.19 லட்சம் பேர் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளனர். கணக்கெடுப்பு பணி முழுமையாக முடியும்போது, 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையில், எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணி முறையாக நடக்க வில்லை என்ற குற்றச் சாட்டும் எழுந்துள்ளது. இது குறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்வது குறித்தும், அதை பூர்த்தி செய்வது எப்படி என்பது குறித்தும், ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்படவில்லை. இதனால், பல இடங்களில் குழப்பம் ஏற்பட்டது. படிவத்தை பெற்றவர்களில் பலர், அதை பூர்த்தி செய்ய தெரியாமல் தவித்தனர். ஏனெனில், அந்தப் படிவத்தில், வாக்காளர் 2005ம் ஆண்டு எங்கு ஓட்டளித்தார்; அந்த தொகுதி பெயர், பாகம் எண், வரிசை எண் போன்றவை கேட்கப்பட்டிருந்தன. இந்த சூழ்நிலையில், அரசியல் கட்சியினர் உள்ளே புகுந்தனர். குறிப்பாக, கணக்கெடுப்பு படிவம் வினியோகம் மற்றும் பூர்த்தி செய்த படிவத்தை வாங்கும் பணியை, தி.மு.க.,வின் ஓட்டுச்சாவடி பிரதிநிதிகள் தங்கள் கைகளில் எடுத்தனர். ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு பதிலாக, இவர்களே படிவம் வினியோகம் செய்தனர். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, சம்பந்தப்பட்ட வாக்காளர் இருக்கிறாரா என்பதை அறிந்து, அவரிடம் கணக்கெடுப்பு படிவத்தை வழங்க வேண்டும். அவர் இல்லையெனில் வழங்கக் கூடாது. இதன் வழியாக, வாக்காளர் உண்மையில் அங்கு வசிக்கிறாரா என்பதை அறிய முடியும். இதுவே இப்பணியின் நோக்கம். ஆனால், அரசியல் கட்சியினர் கைகளில் படிவங்கள் சென்றதால், அவர்கள், முகவரி மாறி சென்றவர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, நேரில் வரவழைத்து படிவத்தை வழங்கினர். மேலும், 'படிவத்தில் கையெழுத்திட்டு கொடுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்றனர். ஆளும் கட்சியான தி.மு.க., நெருக்கடி காரணமாக மாவட்ட தேர்தல் அலுவலர்கள், இப்பணியில் முழுமையாக ஆர்வம் காட்டவில்லை. தேர்தல் கமிஷன் கூறியதற்காக, பணியை முடிக்க வேண்டும் என நினைத்தனரே தவிர, பணி முறையாக நடக்க வேண்டும் என விரும்பவில்லை. எனவே, சரிபார்ப்பு பணி முறையாக நடக்கவில்லை. வழக்கமான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி போலவே இப்பணியும் நடக்கிறது. இப்பணி முறையாக, சரியாக நடத்தப்பட்டால், போலி வாக்காளர்கள் நீக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இப்போது, 50 லட்சம் வாக்காளர்களை நீக்கினாலும், அடுத்து நடக்கும் வாக்காளர் சேர்ப்பு முகாம்களில், 20 லட்சம் பேருக்கும் மேல், பெயர் சேர்க்க விண்ணப்பிப்பர். இதனால், பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். மொத்த வாக்காளர்கள்: 6.41 கோடி கணக்கெடுப்பு படிவம் வினியோகம்: 6.37 கோடி பூர்த்தி செய்யப்பட்ட படிவம் பதிவேற்றம்: 6.04 கோடி *** மொத்த வாக்காளர்கள் 6.41 கோடி வினியோகம் செய்யப்பட்ட படிவங்கள் 6.37 கோடி பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்கள் 6.04 கோடி இறந்த வாக்காளர் எண்ணிக்கை 23,83,775 பேர் நிரந்தரமாக இடம் மாறியவர்கள் 27,01,050 பேர் கண்டுபிடிக்க முடியாதவர்கள் 5.19 லட்சம் பேர்- நமது நிருபர் -