கோவை: பிரபல நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இருப்பதாகக் கூறி, ஆன்லைன் வாயிலாக இன்டர்வியூவில் தேர்வு செய்து, பணம் பறிக்கும் புதுவித மோசடி அரங்கேறி வருகிறது.தங்கள் இருப்பிடத்துக்கு அருகில், வேலை தேடுவோர் மொபைல் ஆப்கள் வாயிலாகவும், இதர இணையதளங்கள் வாயிலாகவும், 'வேலைக்கு ஆட்கள் தேவை' விளம்பரத்தை பலர் தேடுகின்றனர். அதில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். அவ்வாறு விண்ணப்பிப்பவர்களைக் குறிவைத்து, பணம் பறிக்கும் மோசடி, அரங்கேறி வருகிறது.சிறு, நடுத்தர நிறுவனங்களில், பல்வேறு பணி களுக்காக வேலை தேடுவோர் குறிப்பாக, வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் ஏதேனும் ஒரு வேலை கிடைத்தால் போதும் என தேடும் இளைஞர்கள்தான், இந்த மோசடிக் கும்பலின் இலக்கு.எப்படி மோசடி?
பிரபல நிறுவனங்களில் வேலை இருப்பதாக, ஆன்லைனில் விளம்பரம் வரும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பு தகுதி எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை நம்பி, விண்ணப்பிப்பவர்களுக்கு, தொலைபேசி வாயிலாக, இன்டர்வ்யூ நடத்தப்படுகிறது. இந்த இன்டர்வியூவில் வேலை தேடுபவரின் தகுதி, முன் அனுபவம் இவை குறித்து பொதுவாக பேசிவிட்டு, 'நீங்கள் பரிசீலனையில் உள்ளீர்கள்; தேர்ந்தெடுக்கப்பட்டால் பணி நியமன கடிதம் வரும்' எனக் கூறி, அழைப்பைத் துண்டித்து விடுகின்றனர்.பின்னர், மின்னஞ்சலில் பிரபல நிறுவனங்களின் பெயரில், பணி நியமன கடிதம் அனுப்பி வைக்கப்படுகிறது. அதில், 'வாழ்த்துக்கள். நீங்கள் தேர்வாகி விட்டீர்கள். 10 நாட்களுக்குள் வேலையில் சேர வேண்டும்' எனக் குறிப்பிட்டு, அந்த நிறுவனத்தின் தொழிலாளர் கொள்கை, விடுமுறை, சம்பளம் என முழு விவரமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.நிறுவனத்துக்கு நேரில் வந்து, அடையாள அட்டை, சீருடை போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டு, அதற்காக ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கும்.அந்தத் தொகை, முதல் மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்பட்டு விடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கும். வேலை கிடைத்த மகிழ்ச்சியில், மீண்டும் தொடர்பு கொள்பவர்களிடம், அந்தப் பணத்தை ஒரு வங்கிக் கணக்குக்கு அனுப்பச் சொல்லி, பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். அத்தோடு முடிந்தது. அப்புறம் தொடர்பு கொண்டால், 'நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்' என்றோ, 'போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது' என்றோ தகவல் வருகிறது. அப்போதுதான், இது டுபாக்கூர் என தெரியவருகிறது.ஆன்லைன் வாயிலாக, தினமும் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில், பிரபல நிறுவனங்களின் பெயரில், வேலைவாய்ப்பும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. இளைஞர்களே உஷார்!
கிளையில் வேலை!
சமீபத்தில் போலி நியமனக் கடிதம் பெற்ற ஒருவர் கூறியதாவது:ஆன்லைனில் வேலை தேடிய போது, டிராக்டர் மற்றும் வாகனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பிரபல நிறுவனத்தில், வேலை இருப்பதாக கூறப்பட்டிருந்தது. விண்ணப்பித்ததும், ஓரிரு நாட்களில் போனில் விசாரித்தனர்.பின்னர் தேர்வாகி விட்டதாகக் கூறி, நியமனக் கடிதமும் வந்துவிட்டது. அதில், சீருடை, அடையாள அட்டை உள்ளிட்டவற்றுக்காக ரூ.2,600 செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. எனக்கான ஊதியமும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எந்த கிளை என்ற விவரமோ, தொலைபேசி எண்ணோ குறிப்பிடவில்லை. உங்கள் முகவரிக்கு அருகில் உள்ள எந்த கிளையில் வேண்டுமானாலும் நேரில் சேரலாம் என, பொதுவாக குறிப்பிட்டிருந்தது. என்னைப் போன்ற பலருக்கும் இது அனுப்பப்பட்டுள்ளது. ஒரு சிலர் பணம் அனுப்பி ஏமாந்து விட்டனர்.பிரபல நிறுவனத்தின் லோகோ உட்பட, பணி நியமனக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. மோசடிக்கு ஆளாகி பணத்தை இழந்ததை வெளியில் தெரிவிக்க, பலரும் தயங்குவது, மோசடிக் கும்பலுக்கு வசதியாகி விட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.