உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆன்மிகத்தின் அடிப்படை தான் ஏ.ஐ., தொழில்நுட்பம்: ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் பேச்சு

 ஆன்மிகத்தின் அடிப்படை தான் ஏ.ஐ., தொழில்நுட்பம்: ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் பேச்சு

சென்னை: ''ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், நம் இலக்கியம், புராணம், ஆன்மிகத்தின் அடிப்படை,'' என, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் பேசினார். 'பிரசன்ஸ்' இணைய இதழின், 20ம் ஆண்டு விழா மற்றும் இந்திய 'டிஜிட்டல்' பத்திரிகையாளர்கள் சங்கத்தின், 10ம் ஆண்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் மற்றும் 'தினமலர்' நாளிதழ் இணை இயக்குநர் ஆர்.லட்சுமிபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ஊடகத்துறை விழாவில், 'யோகா - அன்லாக் யுவர் இன்னர் ஸ்ட்ரென்த்' எனும் ஆங்கில பதிப்பு புத்தகத்தை, நீதிபதி வள்ளிநாயகம் வெளியிட, அதன் முதல் பிரதியை, காங்., முன்னாள் எம்.பி.,யான, எஸ்.எஸ்.ராமசுப்பு பெற்றுக் கொண்டார். அதேபோல், 'இன்சைட்புல் ரிப்ளக் ஷன்' எனும் ஆங்கில புத்தகத்தை வள்ளிநாயகம் வெளியிட, 'மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன்' நிர்வாக இயக்குநர் விஜயகுமார் பெற்றுக் கொண்டார். மேலும், 'பிரைம் பாயின்ட்' அறக்கட்டளை உருவாக்கிய, இரண்டு ஏ.ஐ., தொழில்நுட்பத்தையும், அவர் வெளியிட்டார். ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் பேசியதாவது: கடந்த 30 ஆண்டுகளில், ஊடகத்துறை மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது. ஒரு காலத்தில் சில நாளிதழ்கள், இதழ்கள் மட்டுமே இருந்தன. இன்றைய இணையதள உலகில், ஒவ்வொருவரிடமும், 'ஸ்மார்ட் போன்' உள்ளது. இது வரப்பிரசாதமாக இருந்தாலும், அதனால் சவால்களும் உள்ளன. நாளிதழ்களுக்கு தணிக்கை முறை என்பது உள்ளது. அது, செய்தியின் உண்மை தன்மையை உறுதி செய்யும். ஆனால், இன்றைய சமூக வலைதளங்களில் கட்டுப்பாடுகள் என்பதே இல்லை. தற்போது, 'டீப்பேக்' வாயிலாக, நடக்காத நிகழ்வுகளை நடந்ததைபோல் காட்டி, படங்கள், வீடியோக்களாக பரப்பப்படுகின்றன. பொய் தகவல் வெறுப்பு, வன்முறை துாண்டல், பொய்யான தகவல் பரப்புவதை, கருத்து சுதந்திரம் என, நம் அரசியலமைப்பு எங்கும் கூறவில்லை. நீண்ட நாட்களாக, நீதி துறையில் பணியாற்றிய ஒருவரான எனக்கு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்கள் கவலை அளிக்கின்றன. ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு திறன், ஒரு கருவி மட்டுமே. அது, மனித சிந்தனையையோ, நெறிமுறைகளையோ, உணர்வுகளையோ மாற்ற முடியாது. ஏ.ஐ.,க்கு சிந்திக்கும் திறன் இல்லை; தரவுகளில் இருந்தே தகவல்களை வழங்குகிறது. அரசியலமைப்பு குறித்து யாராவது அறிந்துக் கொள்ள வேண்டுமெனில், பகவத் கீதை, ராமாயணம், திருக்குறள் ஆகியவற்றை படிக்க வேண்டும். அதில், அரசியலமைப்பு குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும். செயற்கை நுண்ணறிவு புதிதானதல்ல. அது, நம் புராணங்கள், இலக்கியம், ஆன்மிகத்தின் அடிப்படை தான். இவ்வாறு அவர் பேசினார். மாற்றங்கள் 'தினமலர்' நாளிதழ் இணை இயக்குநர் ஆர்.லட்சுமிபதி பேசியதாவது: 'பிரசன்ஸ்' இணைய இதழ் தொடர்ந்து முன்னேற வாழ்த்துகள். செயற்கை நுண்ணறிவு நல்லதா, கெட்டதா என்பதை விட, அதை நாம் எப்படி பயன் படுத்துகிறோம் என்பதே முக்கியம். ஏ.ஐ., ஒரு சிறந்த கருவியாக மட்டுமே இருக்கும். மனித வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கல் யுகம், இரும்பு யுகம், தொழில் புரட்சி, கணினி, இணைய யுகம் ஆகிய மாற்றங்கள் நிகழ, பல ஆண்டுகள் ஆகின. ஆனால், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு, மிகவும் வேகமாக மாற்றம் கண்டுள்ளது; உலகையே அது மாற்றி வருகிறது. அடுத்த மூன்று மாதங்களில், தேர்தல் வருகிறது. ஏ.ஐ., வாயிலாக உருவாக்கப்பட்ட பொய் செய்திகள், கார்டூன்கள் அதிகம் வரும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், இந்திய டிஜிட்டல் பத்திரிகையாளர் சங்கத்தின் நிறுவனர் 'பிரைம் பாயின்ட்' ஸ்ரீனிவாசன், தலைவர் பிரியதர்ஷினி ராகுல், மூத்த பத்திரிகையாளர்கள் பகவான்சிங், ஆர்.நுாருல்லா ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி