சென்னை: ஆலயங்களைப் பராமரிக்க வேண்டிய துறையை, ஆலயங்களின் சொத்துக்களையும், நிதியையும் முறைகேடாகப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆலய நடைமுறைகளுக்கு எதிராகப் பயன்படுத்த, திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.அவரது அறிக்கை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தீபம் ஏற்றி வழிபடலாம் என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. உயர்நீதிமன்றத் தீர்ப்பினை, தமிழகம் முழுவதும் பொதுமக்கள், முருகப் பெருமான் பக்தர்கள் வரவேற்ற நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ஹிந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன அவசியம் வந்தது? ஆலயங்களைப் பராமரிக்க வேண்டிய துறையை, ஆலயங்களின் சொத்துக்களையும், நிதியையும் முறைகேடாகப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆலய நடைமுறைகளுக்கு எதிராகப் பயன்படுத்த, திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? ஹிந்து சமய அறநிலையத்துறையை, முறைகேடாகவும், ஹிந்து சமய மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. தேவையின்றி, பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த, ஆலய நிதியையே பயன்படுத்தும் அயோக்கியத்தனத்தை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.