உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரு டோஸ் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது அரிசி கொம்பன் யானை

இரு டோஸ் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது அரிசி கொம்பன் யானை

கம்பம் : தேனி மாவட்டம், மேகமலையில் பிரச்னை செய்துவந்த அரிசி கொம்பன் ஆண் காட்டு யானை நேற்று முன்தினம் நள்ளிரவு துப்பாக்கி மூலம் இரண்டு 'டோஸ்' மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டது. லாரியில் ஏற்றி திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறைக்கு கொண்டு சென்றனர்.கேரளா இடுக்கி மாவட்டம் சின்ன கானல் பகுதியில் அட்டகாசம் செய்த அரிசி கொம்பன் யானையை அம் மாநில உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிடித்து, கடந்த ஏப்.30ல் பெரியாறு புலிகள் காப்பக பகுதியில் விட்டனர். மே 27 ல் தமிழக வனப்பகுதியான மாவடி, வண்ணாத்தி பாறை பகுதிகளுக்கு வந்து பின் மீண்டும் கேரள வனப்பகுதிக்கு திரும்பியது. மறுநாளே மேகமலை பகுதிக்கு வந்து ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறில் சுற்றி திரிந்தது. ஹைவேவிசில் கருப்பத்தேவர் எஸ்டேட் அருகில் 4 நாட்கள் இரு பெண் யானைகளுடன் இருந்தது. அதன் பின் அங்கிருந்து வெளியேறி மீண்டும் தேக்கடி வனப்பகுதிக்கு சென்றது. மே 26ல் குமுளி ரோஜாப்பூ கண்டம் பகுதிக்கு வந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த்தால் பதட்டமான கேரள வனத்துறையினர் அன்றிரவு வானத்தை நோக்கி பல முறை துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கி சத்தத்தை கேட்ட அரிசி கொம்பன் லோயர்கேம்ப் வழியாக கம்பம் நகருக்குள் மே 27 ல் நுழைந்தது. முதியவர் ஒருவரை கீழே தள்ளியதில் அவர் பலியானார்.மூன்று கும்கி யானைகள், மயக்க ஊசி செலுத்தும் வனஉயிரின டாக்டர்கள் பிரகாஷ், கலைவாணன், ராஜேஷ் உள்ளிட்ட நால்வர் வந்தனர். மே 27 இரவு கம்பத்தை விட்டு கிளம்பிய அரிசி கொம்பன் யானைகெஜம், கூத்தனாட்சி, சண்முகா நதி அணை பகுதியில் முகாமிட்டது. இங்குள்ள வாழை,தென்னந்தோப்புகளை சேதப்படுத்தியது . வனத்துறையினர் பழங்கள், அரிசி வாங்கி வனப்பகுதிக்குள் வைத்தனர். பலமுறை மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தும், அரிசி கொம்பன் வாய்பளிக்கவில்லை. சண்முகா நதி அணையிலிருந்து சின்ன ஒவுலாபுரம் பெருமாள் கோயில் மலைக்கு இடம் பெயர்ந்தது. வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

நள்ளிரவில் ஆ க் ஷன்

ஜூன் 4 இரவு 10:30 மணிக்கு கேரள வனத்துறையினரின் தகவலை தொடர்ந்து, சின்ன ஓவலாபுரத்திற்கு மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, மண்டல வன தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி தலைமையில், துணை இயக்குனர் ஆனந்த் அடங்கிய குழுவினர் டாக்டர்கள் குழுவிற்கு கிரீன் சிக்னல் கொடுத்தனர். இரவு 12:30 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள வாழைத் தோட்டத்திற்கும், தென்னந்தோப்பிற்கும் இடைபட்ட தூரத்தில் டாக்டர்கள் குழு இரண்டு டோஸ் மயக்க மருந்தை துப்பாக்கி மூலம் செலுத்தினார். மயக்க மருந்து செலுத்தியவுடன் யானை அங்கும் இங்குமாக ஓடி, அருகில் இருந்த தொழு மாடுகள் பட்டியை முட்டியது. அங்கிருந்த மாடுகள் சிதறி ஓடின. சிறிது நேரத்தில் யானை மயங்கி நின்றது. குழுவினர் முதலில் யானையின் கால்களை கட்டி உள்ளனர்.நள்ளிரவு 1:00 மணியளவில் கம்பம் வனச் சரக அலுவலகத்தில் இருந்த முத்து, சுயம்பு என்ற இரு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன. அதிகாலை 4:00 மணிக்கு உதயன் என்ற கும்கியும் வந்தது. அதிகாலை 4:15 மணிக்கு ஒசூரில் இருந்து வரவழைக்கப்பட்ட யானைகளுக்கான சிறப்பு ஆம்புலன்ஸ் லாரியில் அரிசி கொம்பன் ஏற்றும் பணி துவங்கியது. 90 நிமிடங்கள் யானையை வாகனத்தில் ஏற்றும் பணி நடந்தது. காலை 5:45 மணிக்கு லாரியில் அரிசி கொம்பன் மிஷன் பணி நிறைவு பெற்றது தொடர்பான வீடியோ, போட்டோக்களை தலைமை வார்டன் சீனிவாச ரெட்டிக்கு அனுப்பினர். அவரது உத்தரவு கிடைத்தவுடன் காலை 6:00 மணிக்கு சின்னஒவுலாபுரம் மலையடிவாரத்தில் இருந்து அரிசி கொம்பனை ஏற்றிய ஆம்புலன்ஸ் லாரி புறப்பட்டது. அங்கிருந்து ஆனைமலையன்பட்டி, கோகிலாபுரம், உத்தமபாளையம் பைபாஸ் வழியாக திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை கொண்டு செல்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந் நடவடிக்கையால் மேகமலையில் அரிசி கொம்பனின் ஒரு மாத பிரச்னை முடிவுக்கு வந்தது.

ஏன் மறைத்தது வனத்துறை

தமிழக வனப்பகுதி மேகமலைப்பகுதியில் அரிசி கொம்பன் நடமாட ஆரம்பித்தது முதல் நேற்று பிடிபட்ட நேற்று வரை மேகமலை புலிகள் காப்பாக துணை இயக்குனர் ஆனந்த், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா பத்திரிகையாளர்கள் என்ன தகவல் கேட்டாலும் கூற மறுத்தனர். அரிசி கொம்பன் பிடிபட்ட போது, கலெக்டர் ஷஜீவனா, யானையை போட்டோ எடுக்க பத்திரிகையாளர்களுக்கு அனுமதியளித்தார். ஆனால் வனத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். கேரளா சின்ன கானலில் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி லாரியில் ஏற்றும் முன் பத்திரிகையாளர்களை வரவழைக்கப்பட்டு படம் எடுக்க அனுமதித்தனர். ஆனால் இங்கு பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை.

துதிக்கையில் பலத்த காயம்

மயக்க ஊசி செலுத்திய இடத்திலும், வாகனத்தில் ஏற்றிய போதும், அங்கிருந்த வனத்துறையினரின் அலைபேசிகள் பறிக்கப்பட்டது. யாரும் போட்டோ எடுக்க கூடாது என்பதற்காக வனத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்தனர். போலீஸ் அதிகாரிகளை கூட அங்கிருந்து வெளியேற்றினர். அரிசி கொம்பன் யானையின் துதிக்கையில் ஏற்கனவே காயம் ஏற்பட்டிருந்தது. தற்போது அந்த காயம் பெரிதாகியுள்ளது.அரிசி கொம்பனை பிடித்தவுடன் வெள்ளிமலை மலைப்பகுதியில் விட முதலில் தீர்மானித்தனர். ஆனால் வெள்ளிமலையில் விட்டால் மீண்டும் மேகமலைக்கு வந்துவிடும் என வனப்பணியாளர்கள் கூறியதால், அத் திட்டம் கைவிடப்பட்டது. பின் கொடைக்கானல், ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதிகளில் விட தீர்மானித்த போது, கேரள வனத்துறையினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். அதன்பின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் விட முடிவு செய்துள்ளனர்.

கேரள ஊடகங்களில் பிரத்யேக படங்கள்

மயக்க ஊசி செலுத்திய இடத்தில் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. அங்கு பணியில் இருந்த வனத்துறையினரின் அலைபேசிகள் பறிக்கப்பட்டது. ஆனால் வனத்துறை சார்பில் எடுக்கப்பட்ட வீடியோ,போட்டோக்கள் கேரள வனத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. கேரள வனத்துறையினர் கேரள பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும் அதனை வழங்கினர். எனவே கேரள ஊடகங்களில் அரிசி கொம்பனை பிடித்த பிரத்யேக படங்கள் வெளியாகி உள்ளது.

144 தடை உத்தரவு ரத்து

அரிசிக்கொம்பன் நடமாட்டத்தை தொடர்ந்து கம்பம், கூடலுார், க.புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிகள் பகுதிகளில் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இரவில் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. நேற்று காலை யானை பிடிக்கப்பட்டு விட்டதால் 144 தடை உத்தரவு விலக்கி கொள்ளப்படுவதாக தேனி கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

கயிறு அவிழ்ந்ததால் பரபரப்பு

பிடிக்கப்பட்ட யானை லாரி மூலம் தேனி வழியாக கொண்டு செல்லப்பட்டது. குன்னுார் டோல்கேட் அருகில் செல்லும் போது யானையின் முன் வலது காலில் கட்டப்பட்டிருந்த கயிறு அவிழ்ந்திருந்தது. வாகனத்தை நிறுத்தி வேறு கயிறு மூலம் கட்டினர். டோல்கேட்டில் வாகனம் 20 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தப்பட்டது. கிளம்பும் போது யானை அருகில் இருந்த இரும்பு கம்பத்தை பிடித்து கொண்டது. அதனால் வாகனத்தை பின்புறம் இயக்கி மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர்.

நள்ளிரவில் நடந்தது என்ன

ஜூன் 4 காலையில் டாக்டர்கள் குழு, உள்ளூரில் உள்ள கால்நடை மருந்தகங்களில் சில மருந்துகள் வாங்கி உள்ளனர். இரவு 8:00 மணிஅதிகாரிகள் குழு சின்ன ஒவுலாபுரம் சென்றது. 10:-30 மணியானை நிற்கும் பகுதியை கண்காணிக்க துவங்கினர். நள்ளிரவு 12:30 மணிமயக்க ஊசி செலுத்தப்பட்டது. 12:40 மணிகம்பம், காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன் பட்டி, ஆனைமலையன் பட்டி, சின்ன ஒவுலாபுரம் ஊர்களுக்கு மின்சப்ளை துண்டிக்கப்பட்டது.அதிகாலை 4:15 மணிஅரிசி கொம்பனை வாகனத்தில் கும்கிகள் ஏற்றின. 5:45 மணிபணி முடிந்தது. காலை 6:00 மணிவாகனம் கிளம்பியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை