போடி: தேனி மாவட்டம், போடி நகராட்சி தலைவரின் கணவர், ஏலக்காய் கிடங்குகளில் நேற்று மதியம் பூட்டுக்களை உடைத்து, வரிஏய்ப்பு தொடர்பாக வருமானவரி துறை விஜிலென்ஸ், ஜி.எஸ்.டி., மற்றும் அமலாக்க துறையினர் இணைந்து சோதனை நடத்தினர். போடி நகராட்சி தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த ராஜராஜேஸ்வரி உள்ளார். இவரது கணவர் சங்கர் தி.மு.க., கவுன்சிலராகவும், அக்கட்சி தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். ஏலக்காய் வியாபாரமும் செய்து வருகிறார். சங்கரின் மகன், இவரது நண்பருடன் சேர்ந்து ஏலக்காய் வியாபாரத்தில் ஈடுட்டுள்ளனர். இவர்கள் ஏலக்காய் மூட்டைகளை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்புவதில் முறைகேடு செய்து பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஜி.எஸ்.டி., புலனாய்வு அமலாக்க பிரிவிற்கு புகார்கள் சென்றன. இதன் அடிப்படையில், நேற்று மதியம், 2:00 மணியளவில் கேரளா, கர்நாடகா மாநிலம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த வருமானவரித்துறை, ஜி.எஸ்.டி., மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள், 50 பேர், மத்திய பாதுகாப்பு படையினருடன், இரட்டை வாய்க்காலில் உள்ள அவரது ஏலக்காய் கிடங்கு, முந்தல் சாலையில் உள்ள மற்றொரு கிடங்கு பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று ஆய்வு செய்தனர். போடி நகராட்சி தலைவர், அவரது கணவர், மகன் ஊரில் இல்லாத நிலையில் இச்சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.